தமிழ்நாட்டில் எங்குமே வாங்கவே கூடாத நிலம்.. வீட்டு மனைகள்.. இதெல்லாம் தப்பி தவறி கூட வாங்கிடாதீங்க
சென்னை: அழகான கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது வார்த்தைகளை நம்பியோ, குறைவான விலைக்கு தருகிறார்கள் என்றோ சில வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை வாங்கவே கூடாது. அப்படி தமிழ்நாட்டில் வாங்கவே கூடாத நிலங்கள், வீட்டு மனைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
அந்த காலத்தில் நிலம் அல்லது வீட்டு மனை வாங்கிய பலர், பத்திரம் பதிந்துவிட்டு பட்டாவை மாற்றாமல் விட்டுவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.குறிப்பாக கிராமங்களில் பட்டா வாங்காமல் விட்டு விடும் நிகழ்வுகள் அதிகமாக உள்ளது.பத்திரம் மட்டுமே தங்கள் பெயரில் வாங்கி இருப்பார்கள்.

அப்படி பட்டா வாங்காமல் பத்திரம் மட்டுமே வாங்கிய நிலங்களை அல்லது வீட்டு மனை அல்லது வீட்டினை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பத்திரம் எவ்வளவு முக்கியமோ, பட்டாவும் அந்தளவிற்கு முக்கியம் உள்ளது.
பத்திரம் என்பது இவருடைய நிலத்தை இவர் வாங்கி இருக்கிறார் என்பதை குறிக்கும். அதேநேரம் அந்த நிலத்தின் உரிமை இவருக்குத்தான் உள்ளது என்பதை குறித்து வருவாய்துறை வழங்கும் ஆவணம் தான் பட்டா. பட்டா குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்காமல் விட்டால் பின்னாளில் சிக்கலும் வரும்.
சரி விஷயத்திற்கு வருவோம். நீங்கள் வாங்க போகும் நிலம் குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம் என்றால் கவனமாக இருங்கள். குடும்ப பாகப்பரிவினை சொத்து என்றால் நீங்கள் வாங்குபவரின் சொத்து, அவரது பெயரில் பட்டா கண்டிப்பாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் பட்டா உங்களுக்கு மாற்ற சிக்கல் வர அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் பழைய பட்டாவில் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்கி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா காணப்படுகிது.
அதனால் தான் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்டவற்றை வாங்குவது சிக்கலாகிறது. ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால் அவர்பெயரில் பட்டா இருந்தால் எளிதாக உங்கள் பெயருக்கு மாற்ற முடியும் என்பதால், நீங்கள் வாங்கும் நபர் பெயரில் பட்டா இருந்தால், அந்த நிலத்தை அல்லது இடத்தை வாங்குங்கள். இல்லாவிட்டால் வழக்கறிஞரிடம் முறையாக ஆலோசனை பெற்று அந்த இடத்திற்கு சிக்கல் இல்லை.எளிதாக பட்டா மாற்ற முடியும் என்றால் மட்டுமே வாங்க வேண்டும். பாகப்பிரிவினை நிலம் என்றால் நிச்சயம் சட்ட ஆலோசனை தேவை.
வாங்கவே கூடாத நிலங்கள்: நீர்நிலைகளை ஒட்டியுள்ள அரசின் புறம்போக்கு நிலங்களை வளைத்து கடந்த சில ஆண்டுகளில் பத்திரம் வாங்கியிருக்கிறார்கள் என்றால், அந்த நிலத்தை வாங்கி விடாதீர்கள். கோயில்களின் பெயரில் உள்ள இடங்கள் அல்லது வீடுகள், மடங்களின் பெயரில் பட்டா உள்ள இடங்கள் அல்லது வீடுகளை வாங்கவே கூடாது.

இதேபோல் சாதி வாரியாக அரசு சிலருக்கு இலசமாக வீட்டு மனைகளை கொடுத்திருக்கும். ஆதிதிராவிடர், கள்ளர், வன்னார் என பலருக்கும் அந்த காலத்தில் அரசு இலவச பட்டா கொடுத்தது. இது போன்ற நிலங்களை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமேவாங்க முடியும் என்ற நிபந்தனை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் வாங்கிவிட வேண்டாம். இதேபோல் அரசு இலவசமாக கொடுத்திருக்கும் சில நிலங்களை யாருக்கும் விற்கவே கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கும். எனவே அப்படிப்பட்ட இடங்களை வாங்கிவிடாதீர்கள்.
இதேபோல் டிடிசிபி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், சிஎம்டிஏ அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வாங்கவே கூடாது. ஏனெனில் அது போன்ற இடங்களுக்கு பாதை அகலமாக இருக்காது. கால்வாய், தார்சாலை அமைத்திருக்க மாட்டார்கள். பூங்கா அல்லது ரேஷன் கடை அல்லது அரசின் உபயோகத்திற்கு இடத்தை அளித்திருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் அங்கீகாரமற்ற மனைகளை வாங்கினால் பின்னால் முறைப்படுத்த முடியாமல் சிக்கலை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல் பட்டாவே இருந்தாலும் தண்ணீரில் மிதக்கக்கூடடிய இடமாக இருந்தால் வாங்க வேண்டாம்.சென்னையின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, மழைகாலத்தில் போய் இடத்தை பார்த்தால் தான், உண்மையான நிலைமை தெரியும். எனவே தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை. வெள்ளம் வடிகால் இருக்கிறது என்பதை உறுதி செய்து வாங்குங்கள். இதேபோல் சில இடங்களில எவ்வளவு போர் போட்டாலும் தண்ணீரே இருக்காது. தண்ணீர் போரில் வராது என்றால் அந்த இடத்தை வாங்கி வீடு கட்டி பின்னாளில் கஷ்டப்படும் நிலை வரலாம். அதையும் பாருங்கள்.












Click it and Unblock the Notifications