‛‛மூக்கை துளைத்த அதிரச வாசனை’’.. பிரசார வாகனத்தில் நின்று தமிழிசை செய்ததை பாருங்க! ஒரே கலகலப்பு
சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பிரசாரத்துக்கு நடுவே வந்த அதிரச வாசனைக்கு பிறகு நடந்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தென்சென்னை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெயவர்த்தன் களமிறங்கி உள்ளார்.

பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் சீமானின் நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வி களமிறங்கி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை லோக்சபா தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தொகுதியிலேயே முகாமிட்டு அவர் வெற்றி பெறும் நோக்கத்தில் வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட தியாகராயநகரில் நல்லாங்குப்பம் பகுதியில் வழக்கம்போல் பிரசாரம் செய்தார்.
திறந்த வாகனத்தில் நின்றபடி தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். வரும் லோக்சபா தேர்தலில் தனக்கு பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறினார். இந்த சமயத்தில் வீட்டில் சுடச்சுட அதிரசம் தயாராகி வந்தது. இதையடுத்து பிரசார வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த 3 பெண்களில் ஒருவர் தான் தயாரித்த அதிரசத்தை பேப்பரில் எடுத்து வந்து சிரித்த முகத்துடன் பிரசார வாகனத்தில் நின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கினார்.
அதனை புன்னகையுடன் தமிழிசை சவுந்தரராஜன் பெற்று கொண்டு ருசித்தார். மேலும் எவ்வளவு பணம்? என கேட்டார். அதற்கு அந்த பெண் பணம் வேண்டாம் எனக்கூறினார். இந்த வேளையில் தமிழிசை சவுந்தரராஜன், அதிரசம் அளித்த பெண்ணிடம், ‛‛ரொம்ப சந்தோஷம். எதுக்கு நின்னேன் என்றால் உங்கள் அதிரசத்தின் வாசனை மூக்கை துளைத்தது. அதனால் தான் நின்னேன். ரொம்ப சந்தோஷம்'' எனக்கூறினார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு பிரசாரத்தை கலகலல்பாக்கியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுதவிர தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பங்களில் பல வேட்பாளர்களும் டீ போடுவது, தோசை சுடுவது, பரோட்டோ போடுவது, பஜ்ஜி, வடை என சமைத்து அசத்தி வருகின்றனர். இப்படியாக தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications