நாகை, திருப்பூரில் மீண்டும் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதியும் திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட கோவை தொகுதிக்கு பதிலாக இந்த முறை திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வென்ற தொகுதிகளாக திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். வென்ற தொகுதிகளே வேண்டும் என்று திமுக தலைமையிடம் போராடி கேட்டுப்பெற்றுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.












Click it and Unblock the Notifications