206 ரோடு ஷோக்கள்; 80 பேட்டிகள், 1 தியானம்! ‘குறி’ தாக்கிய மோடி? 100 இல் சுருண்ட ராகுல் காந்தி!
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார காலத்தில் பிரதமர் மோடி மொத்தம் 206 பேரணிகளை நடத்தியுள்ளார். ராகுல் காந்தியும் பிரியங்காவும் முறையே 100 பேரணிகளில் பங்கேற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் அதாவது மே 30 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களாகக் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார்.

கடந்த 2019 இறுதிக்கட்ட தேர்தலின் போது பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் தியானத்தில் ஈடுபட்டார். இந்த முறை அவர் கன்னியாகுமரியை அவர் தேர்வு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகக்கூட சில தகவல்கள் பரவின. ஆனால், வழக்கம் போல அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சொல்லப்போனால் அவர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு அதிக முறை வருகை தந்துள்ளார். அவர் பிரதமராகப் பதவியேற்றது முதல் கிட்டத்தட்ட 57 முறை தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்துள்ளார் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து சில தொகுதிகளை இந்தமுறை வென்று எடுக்க வேண்டும் என்று அவரது கட்சி முடிவெடுத்துள்ளது.
கடந்த 2019ல் பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. இந்தமுறை 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைப் பொறுத்தவரை மோடியைத்தான் ஒரு பிம்பமாக முன்வைத்தது. கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் 'குஜராத் மாடல்' , 'புல்வாமா தாக்குதல்' போன்ற முகங்களை பாஜக முன்வைத்திருந்தது.
இந்த முறை மோடிதான் வெற்றியின் அடையாளம் எனக் கட்டமைத்தது பாஜக. ஆகவேதான், 'மோடியின் கியாரண்டி' என்று கட்சியின் சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.

கடந்த இரண்டு தேர்தல்களைவிட, இந்தப் பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி பல்வேறு பிரச்சார வியூகங்களை வகுத்து அதைச் செய்தும் முடித்துள்ளார்.
கிட்டத்தட்ட இந்தியா முழுக்க உள்ள பெருநகரங்களில் எல்லாம் அவர் ரோடு ஷோக்களை நடத்தியுள்ளார். பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி இருக்கிறார்.
ஊடகங்களைச் சந்திப்பதையே தவிர்த்து வந்த மோடி, இந்தத் தேர்தலை ஒட்டிப் பல ஊடகங்களுக்கு நேரலை பேட்டி முதல் அச்சு ஊடக பேட்டிவரை அனைத்தையும் வழங்கி இருக்கிறார்.
அப்படி அவர் கொடுத்த பல பேட்டிகள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பின. ராமர் கோயில் தொடங்கி காந்தி வரை அவர் பேசிய பேச்சுகள் விவாதத்தைக் கிளப்பி இருந்தன.
இந்தத் தேர்தலை ஒட்டி மட்டும் மோடி கிட்டத்தட்ட 206 நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார். இது கடந்த காலங்களைவிடக் கூடுதல். 2019 தேர்தலின் அவர் 145 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்படிப் பார்த்தால் கடந்த கால சாதனையை அவரே முறியடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு மட்டும் மொத்தம் 68 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கால அவகாசம் இம்முறை 76 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனவே, கடந்த முறையைவிட அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான சூழல் இந்த முறை அனைத்து கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. இந்தக் கால இடைவெளியே பிரதமர் மோடியின் பிரச்சார அட்டவணைக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
இதனுடன் ஒப்பிடும் போது இந்த முறை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அட்டவணை பிரதமருக்குச் சாதகமாக உள்ளது என்ற வாதத்தை எளிதாகப் புறக்கணிக்க முடியாது என்றே தரவுகள் சொல்கின்றன.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, 200க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் ஊடகங்களுக்கு 80க்கும் மேற்பட்ட பேட்டிகளை அவர் அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலக வட்டாரம் வழங்கியுள்ள தரவுகளை மேற்கோள் காட்டி தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூஸ் 18இன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பிரதமர் மோடி மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. மேலும் கடந்த 22 நாட்களில், அவர் தினந்தோறும் 4 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி இருக்கிறார்.
அதிக மக்களைவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பிரதமர் மொத்தம் 31 பேரணிகளில் கலந்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பீகாரில் 20 நிகழ்ச்சிகளிலும் மகாராஷ்டிராவில் 19 பேரணிகளிலும் மோடி பங்கேற்றுள்ளார்.

அடுத்ததாக மேற்கு வங்கத்தில், பிரதமர் மோடி ஒரு மெகா ரோடு ஷோ உட்பட 18 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி இருக்கிறார்.
மோடியுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தத் தேர்தலுக்காகப் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 107 நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
அதேபோல் காங் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 108 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதில் உபி மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications