ட்விஸ்ட்.. சேலம் மாநகராட்சி ஆணையரின் ஜெயில் தண்டனை திடீர் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சேலம் மாநகராட்சி ஆணையருக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதித்திருந்தது உரிமையியல் நீதிமன்றம்.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. இவருக்கு சொந்தமான வீட்டை சேலம் மாநகராட்சி இடித்து பொது சாலை அமைத்ததாக குற்றம்சாட்டி, சேலம் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மல்லிகாவுக்கு மீண்டும் வீடு கட்டித்தர வேண்டும் என நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை நிறைவேற்றாததால், மாநகராட்சி ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார் மல்லிகா.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சேலம் மாநகராட்சி ஆணையருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தண்டனையை ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம், மீண்டும் வீடு கட்டித் தர வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த இரு வழக்குகளும், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குறிப்பிட்ட அந்த நிலம் அரசுப் பொதுப்பாதை என்றும், மல்லிகாவுக்கு சொந்தமானது அல்ல எனவும் வாதிட்டார். அரசு பொதுப்பாதையை ஆக்கிரமித்த தகவலை மறைத்து மல்லிகா தமக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாகவும் வாதிட்டார். எனவே, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications