சாந்தி திரையரங்கு சொத்துகள் விற்பனை.. சிவாஜி கணேசன் மகள்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: சாந்தி திரையரங்கு சொத்துகள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரியும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த கூடுதல் மனுக்களானது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சொத்துகளிலும் தங்களுக்கும் சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் 'அக்ஷயா ஹோம்ஸ்' ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் தங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இதுதொடர்பான சொத்துகள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

அதே சமயத்தில் நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010-ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது.
இந்நிலையில், கூடுதல் மனுக்கள் மீதான வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
