சபாஷ்.. இது இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கை.. முதல்வருக்கு, மதுரை எம்.பி பாராட்டு!
சென்னை: நெல்லையில்பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி கிராமம் தமிழ், தமிழர்களின் பெருமையை தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.
இங்கு தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயங்கள், உறைகிணறுகள், பல்வேறு பொருட்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்ததையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் நமக்கு எடுத்துரைத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பெருமையுடன் பேசினார். கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது எனக்கூறிய முதல்வர் "இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு பாதியிலேயே கைவிட்டது என்று குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழின் பெருமையை உலகம் எங்கும் சென்று தேடுவோம் என்றும் கேரளா, கர்நாடகாவில் ஆதிகால தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படும் என்று கூறினார். மேலும், நெல்லையில் ரூ.15 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
கீழடி ஆய்வை தொடர்ந்து மேம்படுத்துவோம், தமிழர்களின் நாகரிகத்தை உலகம் முழுவதும் எடுத்துரைப்போம் என்று முதல்வர் கூறியதற்கு வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- விதி 110 இன் கீழ் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும். புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது.
கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது. பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உரத்துச் சொல்வோம்! இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்.தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேடி கடல் கடந்து தொல்லியல் ஆய்வு நடைபெறும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த குடியின் வரலாறு அறிவியலின் துணையோடு மீட்டெடுக்கப்படும். வரலாறு பற்றிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும் பாராட்டும். இவ்வாறு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications