எங்களுக்கு 1 சீட் கண்டிப்பா வேணும்.. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் மனிதநேய மக்கள் கட்சி!
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன. விசிக, முஸ்லீம் கட்சிகளுடன் வரும் 12ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி. இக்கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இப்போது வரை ம.ம.க.வை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு, ம.ம.க.வின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு முக்கிய முடிவுகள் இந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மமக அரும்பாடு பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வாகை சூடியது. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மமக வென்றது. இந்தியா கூட்டணியின் அங்கமான மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் கூட்டணியின் கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். நாடு முழுவதும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உண்மைத் தகவலை வெளியிட வேண்டும். மாநில அரசை முடக்கும் வேலையை மட்டும் செயல்படும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் மமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். திமுக கண்டிப்பாக மமக கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications