சிக்கலில் நீட் தேர்வு..நீட்டாக கல்லா கட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்! அட்வான்ஸ் புக்கிங் பிசி!
சென்னை: 2024ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக மீண்டும் மறு தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக 'அட்வான்ஸ்' பெற்று இடங்களை முன்பதிவு செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது.

சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் சில நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.
அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என எண்டிஏ கூறியிருந்தது. வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. மேலும் பணம் பெற்றுக் கொண்டு வினாத் தாளை கசிய விட்டது, தேர்வு எழுதும் போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இதனையடுத்து முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் உச்சநீதிமன்றம் முறைகேடுகள் தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, ஏன் மறு தேர்வுக்கு உத்தரவிடக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக 'அட்வான்ஸ்' பெற்று இடங்களை முன்பதிவு செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிலர் சில தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை "அட்வான்ஸ்' செலுத்தி மருத்துவ சீட்களை "புக்கிங்' செய்ய ஆரம்பித்துள்ளனர். தேர்வு முடிகள் எப்படி இருந்தாலும் தாங்கள் மகன்/மகள் மருத்துவராக வேண்டுமென நினைக்கும் பெற்றோர்களை குறிவைத்து சில மருத்துவக் கல்லூரிகள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குச் செல்லும் பெற்றோர்கள் கல்லூரி வளாகத்திற்கு வரவழைக்கும் புரோக்கர்கள், அவர்களின் மொபைல் ஃபோன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. செல்போன் உள்ளிட்டவற்றை ஒப்படைத்த பின்னர் அவர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று பேரத்தை தொடங்குகிறார்கள். முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மாணவர்கள் தங்களுக்கு சீட்டுகளை முன் பதிவு செய்ய மூன்று லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பிறகு கவுன்சிலிங் வரும்போது நிகர் நிலை பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்லூரியை முதல் தேர்வாக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். அப்போது சீட்கள் 'நிரம்பி விட்டதாக' மோசடி செய்து அட்வான்ஸ் கொடுக்கும் மாணவர்களுக்கு சீட் வழங்கப்படுகிறது. சீட் கிடைத்தால் மருத்துவ கட்டணத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி, முதலாம் ஆண்டு கட்டணத்தில் ஏற்கனவே செலுத்திய மூன்று லட்சம் ரூபாய் முன்பணமானது கழித்துக் கொள்ளப்படும் என கூறுகிறார்கள். மேலும் கட்டணத்தை குறைப்பதற்காக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சான்றிதழும் வழங்கப்படுகிறது என்ற பகீர் தகவல் வெளியாகியிருக்கிறது.
தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் போதும் குறைவான மதிப்பெண்கள் இருந்தாலும் தங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் இருப்பதால் எப்படியாவது சீட் கிடைத்துவிடும் எனக் கூறி வசூல் வேட்டை நடத்துவதாக, மருத்துவ இடங்களுக்காக கேட்டுச் சென்ற ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை சீட் கிடைக்கவில்லை என்றால் செலுத்திய முன் பணத்தை திருப்பித் தந்து விடுவோம் எனவும் அவர்கள் கூறுகிறார்களாம்.
மற்றொரு கல்லூரியில் மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுத்த பின் மாணவர்களது ஆவணங்கள் கல்லூரி தரப்பில் பெறப்படுகிறது. கவுன்சிலிங்கின் போது மாணவர்கள் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு, நிச்சயம் இடம் கிடைக்கும் எனவும் கூறி வருகின்றனர். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கட்-ஆஃப்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் அதிகரிக்கும் என்பதால், முதல் சுற்றில் இருக்கைகளைத் தடுத்து வைத்து, முன்பணம் செலுத்துபவர்களுக்கு அந்த இடத்தை அளிப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது,
இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது என மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு, சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ ஆலோசனைக் குழு அல்லது மாநிலத் தேர்வுக் குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் எந்தக் கட்டணத்தையும் நன்கொடையையும் முன்கூட்டியே வசூலிக்க முடியாது" என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பால் அங்கீகரிக்கப்படாத எந்த சீட் ஒதுக்கீடுகளும் சட்டவிரோதமானது எனவும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்" என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications