தோல்வியை ஏற்க முடியாமல் திசைதிருப்பும் ‘இந்தியா’ கூட்டணியினரே.. இவரை பாருங்க.. அண்ணாமலை பரபர பதிவு!
சென்னை: கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி, காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில், அண்ணாமலை 'இந்தியா' கூட்டணியினருக்கு ஒரு சேதியைச் சொல்லியுள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. கேசிஆர் தான் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில் முதல் முறையாக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளார் கேசிஆர்.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களுக்கு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி 64 இடங்களிலும், பி.ஆர்.எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், ஓவைசியின் AIMIM கட்சி 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் அங்கு வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை சாத்தியமாக்கி கொடுத்தவர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியில் பணியாற்றிய ரேவந்த் ரெட்டி கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தலைமையின் நம்பிக்கையைப் பெற்று, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக வழிநடத்தினார்.
தெலுங்கானாவின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராகவும் அவரே இருந்தார். அதையொட்டியே, 2 தொகுதிகளில் போட்டியிட்டார் ரேவந்த் ரெட்டி. முதல்வர் சந்திரசேகர் ராவ் போலவே 2 தொகுதிகளில் போட்டியிட்டார் ரேவந்த் ரெட்டி. அதில், ஒன்றில் வெற்றி பெற்றார். இன்னொரு தொகுதி கேசிஆருக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் ஒருசேர அதிர்ச்சி அளித்தது.
காமாரெட்டி தொகுதியில், பாரத் ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தற்போதைய முதல்வருமான சந்திரகேசர ராவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். கடுமையான போட்டி நிலவிய நிலையில், மூன்றாவதாக இருந்த பாஜகவின் வெங்கட ரமண ரெட்டி, கேசிஆரையும், ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி, வாகை சூடியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு.. தோல்வியை நேர்மையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத, வடக்கு- தெற்குப் பிரிவினையைப் பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சியினரே, தயவு செய்து கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி காருவை பாருங்கள்.
காமாரெட்டி தொகுதியின் பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி, தெலுங்கானாவில் தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை தோற்கடித்துள்ளார்." எனக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
4 மாநில தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே, 3ல் காங்கிரஸ் தோற்றபோதும், தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள திமுகவினர், தென் மாநிலங்கள் பாஜகவை அண்டவிடாது, தெற்கு எப்போதும் தனித்தன்மையோடு நிற்கும் என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதையொட்டியே, அண்ணாமலை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications