ஆண்கள் தினம்.. சென்னை பெசன்ட் நகர் பீச்சில் குவிந்த பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள்.. வைத்த கோரிக்கை
சென்னை: நவம்பர் 19ம் தேதியான நாளை 'ஆண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள்.. சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். திருமணத்திற்கு முன்பே சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், தங்களை போல் கஷ்டப்படக்கூடாது என்றும் கூறிய அவர்கள், கேக் வெட்டி ஆண்கள் தினத்தை கொண்டாடினார்கள்.
நவம்பர் 19ம் தேதியான நாளை உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேவ் இண்டியன் பேமிலி பவுண்டேசன் என்னும் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கேக் வெட்டி ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், ஒருவருக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். சட்டங்களை தெரிந்து கொண்டு திருமணம் செய்ய வேண்டும் என்று டீசர்ட் அணிந்திருந்த அவர்கள், ஆண்களுக்கும் சட்டத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதுபற்றி சேவ் இண்டியன் பேமிலி பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நாளை உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை இன்று நாங்கள் கொண்டாடுகிறோம்.. நிறைய பேருக்கு நவம்பர் 19ம் தேதி ஆண்கள் தினம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது.. ஆனால் பெண்கள் தினம் என்றைக்கு என்று கேட்டால் மார்ச் 8 என்று சட்டுன்னு சொல்லிடுவாங்க.. சமூக வலைதளங்களில் பெண்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்...
ஆனால் ஆண்கள் தினம் அன்று பார்த்தால்... எங்கு பார்த்தாலும் சைலெண்ட்டாகவே இருக்கும். அதனால் ஆண்கள் தினத்தை மேலும் பரப்புவதற்கும்.. ஆண்களுமே இந்த சமூகத்தின் முக்கியமான நபர்கள் என்பதை காட்டவும் இன்று ஆண்கள் தின கொண்டாட்டம் நடத்தி உள்ளோம்.. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண், அந்த குடும்பத்தில் தூண் ஆக இருக்கிறார்.. பசங்களை படிக்க வைப்பதில் இருந்து மனைவியை காப்பாற்றுவது வரைக்கும்.. அவங்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது வரைக்கும்.. இதெல்லாம் ஒரு ஆணின் கடமை.. அதை பாராட்டுவதற்காக இன்றைக்கு நாங்கள் ஆண்கள் தினத்தை கொண்டாடுகிறோம்..
எங்களுடைய சேவ் இண்டியன் பேமிலி பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் மூலம் நிறைய ஆண்களுக்கு சட்ட உதவி செய்திருக்கிறோம்.. மனநல ஆலோசனை உதவியும் செய்திருக்கிறோம்.. இங்கு சட்டங்கள் எல்லாமே பெண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.. ஆண்களுக்காக சட்டங்கள் எதுவும் இல்லை.. உயிரை விட்டுவிடலாம் என்று போனவர்களை கூட நாங்கள் காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறோம்.. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இங்கு சமமான சட்டம் இங்கு கிடையாது. அதேநேரம் ஆண்களுக்கும் சட்டத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும்... ஆண்கள் வந்து பொய்யான வரதட்சணை கொடுமை கேஸை நிறைய சந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க.. உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமுமே வரதட்சணை வழக்கை பெண்கள் மிகவும் தவறாக பயன்படுத்துவதாக கூறியிருக்கிறது. சட்டங்களை அறியாமல் திருமணம் செய்ய வேண்டாம்" என்றார்












Click it and Unblock the Notifications