இப்போ தெரியுதா தியாகராஜன்? நீங்கள் எஃப்எம்மாக இருந்த போது எங்களுக்கும் கஷ்டம்தானே.. துரைமுருகன் கலகல
சென்னை: தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை என கேட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம், இப்போ தெரியுதா தியாகராஜன், நாங்கள் உங்ககிட்ட நிதி கேட்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் நிகழ்வுகள் கடைசி நாளாக இன்று கூடியது. கேள்வி நேர விவாதத்தின் போது பேசிய கீழ்ப்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டியின் கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

அவர் கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள கடம்பை கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போதைக்கு ஐடி பார்க் உருவாக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அங்கிருந்து 160 கி.மீ. தொலைவில் சென்னையில் சோழிங்கநல்லூர் 187 கி.மீ. தொலைவில் ஒசூர் ஆகிய இடங்களில் ஐடி பார்க் உள்ளதால் தற்போது புது ஐடி பார்க் தொடங்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறினார்.
மீண்டும் பேசிய கு.பிச்சாண்டி, கீழ்பெண்ணாத்தூரில் இருந்து சென்னை, ஓசூர் அருகில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அங்கெல்லாம் இடம் கிடைப்பு கடினம். ஆனால் எங்கள் பகுதியில் 140 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இது போன்ற இடங்களில் ஐடி பார்க் கட்டினால் வளர்ச்சிக்கு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கையில், நிலம் கிடைப்பது கடினம்தான். ஆனால் குறுகிய நேரத்தில் குறுகிய செலவில் வேலை வாய்ப்புகளை ஐடி துறையால்தான் உருவாக்க முடியும். அதற்கு நிதி ஒதுக்கீடு தேவை! இந்த நிதியாண்டில் ஐடி துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு 119 கோடி ரூபாய். இதை சிலவற்றுக்குத்தான் பயன்படுத்த முடியும். கர்நாடகாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது துரைமுருகன் குறுக்கிட்டு பேசினார். அவர் பேசுகையில், இப்போ தெரியுதா தியாகராஜன்! நாங்கள் உங்ககிட்ட நிதி கேட்கும் போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு என கிண்டல் செய்தார். இதற்கு அவையில் சிரிப்பலை எழுந்தது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதித் துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவியேற்றார். பின்னர் அவர் அந்த துறையிலிருந்து நீக்கப்பட்டு தங்கம் தென்னரசிடம் நிதித் துறை கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications