அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்! வேலை வேகமாக நடக்கணும்! அமைச்சர் எ.வ.வேலு ஸ்பெஷல் கவனம்!
சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தின் மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து இது குறித்த முன்னேற்றப் பணிகளை கேட்டறிந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை மாணியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளும் செயல்படுத்தப்பட்டதால் தலைமைப் பொறியாளர்களை அமைச்சர் எவ வேலு பாராட்டியுள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பொதுப்பணித்துறையின் திட்டப்பணிகள் மற்றும் அறிவிப்புகள் மீதான தொடர் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரியக் கட்டடங்களின் புனரமைப்புப் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து தனது ஃபோகஸை மதுரை பக்கம் திருப்பிய எவ வேலு, மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3 முக்கிய கட்டுமானப் பணிகள் குறித்து அதிக நேரம் ஆலோசித்திருக்கிறார்.

மதுரை மாவட்டத்தில் 3 பணிகள்
மதுரையில் கட்டப்படும் வரும் கலைஞர் நினைவு நூலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணி, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம், மதுரையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட நீதிமன்றக் கட்டடங்களின் பணிகள் குறித்து டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார். அதில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகம் விவாதித்திருக்கிறார் அமைச்சர் எவ வேலு.

ஜல்லிக்கட்டு அரங்கம்
ஸ்பானிஷ் புல் ரிங்கை காட்டிலும் சர்வதேச தரத்தில் இந்த அரங்கம் அமைய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் அமைச்சர் எவ வேலு. தாம் அமைச்சராக இருந்தபோது கட்டிய அரங்கம் என்ற பெயரும், வரலாறும் காலத்திற்கும் நிலைக்க வேண்டும் என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கப் பணிகளில் வேலு ஸ்பெஷல் கவனம் செலுத்துகிறார் என்றே கூறலாம்.

இதர பல பணிகள்
இதனிடையே கிங் நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டடம், தமிழ்நாட்டில் 69 புதிய தொழில்நுட்ப பணிமனைகள், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம், கருணாநிதி நினைவிடம் மற்றும் அந்த வளாகத்திலேயே கட்டப்படவிருக்கும் அருங்காட்சியகம், ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளில் முன்னேற்றம் தொடர்பாகவும் அமைச்சர் எவ வேலு ஆய்வு செய்திருக்கிறார்.

டிரெய்னிங் அவசியம்
அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்படும் புதிய உதவிப் பொறியாளர்களுக்கு, உரிய களப்பயிற்சி அளிக்க வேண்டும் என்று முக்கியமாக அறிவுறுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலு. ஏனெனில் பல இடங்களில் உதவிப் பொறியாளர்கள் களப்பணியில் போதிய அனுபவின்மையாளர்களாக இருப்பதேயாகும்.












Click it and Unblock the Notifications