கமிஷனர் எங்கே இருந்தாலும் பளிச்னு தெரிவார்! யோவ் நகருயா! அமைச்சர் கே.என்.நேருவுக்கு வந்த கோபம்!
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புதிய நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி ஊழியர் ஒருவர் மீது டென்ஷன் ஆன நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவிடங்களில் நாவடக்கத்துடன் பேசுமாறும், கவனத்துடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனையோ முறை அறிவுரை வழங்கிவிட்டார். இருப்பினும் ஒரு சில அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கித் தான் வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இது போன்ற சர்ச்சைகளில் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்ற மூத்த அமைச்சர்கள் தான் அதிகம் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் கூட, நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் பயிற்சிக் கூட்டத்தில், தூங்கி வழிந்த அலுவலர் ஒருவரை எல்லோர் முன்னிலையிலும் வெளுத்து வாங்கினார் அமைச்சர் நேரு.
அமைச்சர் நேருவை போலவே, சில நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில், சாலை பணியாளரை பார்த்து உனக்கெல்லாம் யாருய்யா டிரெய்னிங் கொடுத்தது? என அமைச்சர் எ.வ.வேலு கோபத்தை கொட்டித் தீர்த்தார். இதேபோல் பல நிகழ்வுகளை கூறலாம்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று புதிய நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. அதில் கற்பூரத் தட்டை கையில் வைத்துக்கொண்டு நின்ற மாநகராட்சி ஊழியரை பார்த்து, அங்க காட்டுயா என கடிந்துகொண்டார் அமைச்சர் நேரு. அதைத் தொடர்ந்து அதே நபர் செங்கல்லை எடுத்து வைக்கும் போது குறுக்கே நின்றதால் மீண்டும் டென்ஷனான அமைச்சர் நேரு, யோவ் நகருய்யா என கடுகடுத்தார்.
இதனிடையே போட்டோ செஷனில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை எங்கே கமிஷன்ர் எனக் கேட்டு தேடிய அமைச்சர் நேரு, அவர் தனக்கு பின்னால் நின்றதை பார்த்து அவர் எங்கே நின்றாலும் பளிச்ன்னு தெரிவார் என கமெண்ட் அடித்தார். இதனால் அங்கு நிலவிய இறுக்கமான நிலை மாறி சிரிப்பலை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications