“டூப்ளிகேட் போட்டோ” சீமான்.. பெரியார் பற்றி பேசுவதே இதற்காகத்தான்.. அமைச்சர் பொன்முடி ரிப்ளை
சென்னை: பெரியார் குறித்து பேசினால் தன் பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்பதால் தான், சீமான் பெரியார் குறித்து பேசி வருவதாகவும் டூப்ளிகேட் போட்டோ எடுத்து பிராபகரனோடு இருப்பது போல் உருவாக்கியவர் அவர் என்றும் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பெரியார் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில், "ஆளே இல்லாத நபர்கள் எல்லாம் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் மனசாட்சியோடு சிந்தித்தாலே தெரியும். சிந்திக்காமல் எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார். பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாக டூப்ளிகேட் போட்டவை வைத்து வெளியிட்டவர் தான் சீமான். பிரபாகரனே பெரியார் குறித்து சிறப்பாக பேசியுள்ளார்.
அவர் என்ன நினைக்கிறார் என்றால், இந்த மாதிரி பெரியார் குறித்து நாம் பேசினோம் என்றால், நம்மளுடைய பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்று நினைத்து பேசுகிறார். இது ஒரு பிரச்சார யுக்தி. இது தமிழர்களின் ஆட்சி, தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி. யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
இது தமிழர்களின் ஆட்சி, தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு காரணமாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா தான் தமிழ் மொழிக்காக எங்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற, உயிரைக்கொடுத்து வருவதாக கூறினார். இந்தி உள்ளே நுழையக்கூடாது, தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இளைஞர்கள் பலர் உயிர்நீத்துள்ளனர்.
பெரியாருக்கும், திமுகவுக்கும் எந்த தீங்கும் வராது, எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பது தான் இந்த ஆட்சி யாரும் மறுக்க முடியாது. திராவிட மாடல் வளர்ச்சியை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது." என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
முன்னதாக, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சீமான் பிரபாகரன் உடன் இருப்பது போல தான் தான் எடிட் செய்து கொடுத்ததாக கூறினார். இந்த விவகாரம் தற்போது தீவிர விவாதமாகி உள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர் பொன்முடி அந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு சீமானை விமர்சித்துள்ளார்.
மேலும், சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சீமான் வீடு நேற்று பெரியாரிய ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டது. ஆனாலும், சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
நேற்று கூட, "பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். கர்நாடகாவில் பிறந்த அவர் தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறார்? பெரியார் தொடர்பாக நான் இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை. கையை தான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இவ்வளவு அலறுகிறார்கள்" எனக் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications