Ponmudi : திமுகவில் இருந்து ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல், அமைச்சர் பொன்முடி!
சென்னை: திமுகவில் இருந்து ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல், அமைச்சர் பொன்முடிதான்.. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சந்திக்கும் முதல் திமுக நபரும் பொன்முடி தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் திமுகவைச் சேர்ந்த செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு காலக்கட்டத்திலும் உயர்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011-ம் ஆண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்சஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ள வில்லை எனவும் வாதிட்டார். குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது நீதிபதி கூறுகையில்,
அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, சிறப்பு நீதிமன்றம் மேலோட்டமாக இந்த வழக்கை விசாரித்திருக்கிறது. அதுவும், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரது வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டும், 2 பேர் வருமானத்தை ஒன்றாக சேர்த்தும் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றதின் முடிவு அடிப்படையிலேயே தவறாக உள்ளது.
விசாலாட்சி, பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவியாவார். தெரியாத (கணக்கில் காட்டப்படாத) வகையில் கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்த சொத்துக்கள் எல்லாம் அவரது வருமானத்தில் வாங்கியதாக ஒரு வேளை முடிவு செய்து இருக்கலாம். அதேநேரம், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் பெயரில் வாங்கிய சொத்துக்கள் எல்லாம், அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலம் வாங்கப்பட்டதா? என்பதை சிறப்பு நீதிமன்றம் முதலில் கண்டறிந்து இருக்க வேண்டும். அதை செய்யாமல், விசாலாட்சியின் பெயரில் இந்த 5 ஆண்டுகளில், அவரது வருமானத்தை கொண்டு இவ்வளவு சொத்துக்கள் வாங்க முடியாது என்ற போலீசாரின் ஆதாரங்களையும் ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.
விசாலாட்சி பெயரில் உள்ள பெரும்பாலான சொத்துக்கள், பொன்முடிதான் இவர் பெயரில் வாங்கியுள்ளார் என்பதற்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. இவ்வாறு நம்பத்தகுந்த காரணங்களை எல்லாம் ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. விசாலாட்சி வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த வருமான கணக்கை ஏற்றுக்கொண்டு விடுதலை செய்துள்ளது. இவற்றை பார்க்கும்போது சுதந்திரமான ஆதாரங்களை ஆய்வு செய்யாமல், இதுபோல சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு அப்பட்டமான தவறு மற்றும் வெளிப்படையான பிழையாக உள்ளது..
விடுதலை செய்வதற்கான முடிவுக்கு வருவதற்கு முன்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கில் சுதந்திரமான ஆதாரங்களை தேடியிருக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவசாயத்தின் மூலம் 55 லட்சத்து 36 ஆயிரத்து 488 ரூபாய் கிடைத்தது என்று கற்பனையாக சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சுமார் 13 லட்சத்து 81 ஆயிரத்து 182 ரூபாய்தான் வருமானமாக கிடைத்திருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை.
அதனால், வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமான கணக்கு விவரங்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தவறான முன்னுதாரணமாகிவிடும். பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த சுதந்திரமான ஆதாரங்களை நீதிமன்றம் பரிசீலனை செய்யவில்லை.. போலீசார் தாக்கல் செய்த வங்கி கணக்குகளில் ஆவணங்கள் மீதும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தவறான விளக்கங்களை அளித்துள்ளார்.
ஆகவே பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய்க்கு, அதாவது வருமானத்தை விட அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்துச் சேர்த்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். இந்த வழக்கில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து அவர்களது கருத்தை கேட்பதற்காக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது இடையூறு இருந்தால், காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜராகலாம்" இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.
குற்றவாளி என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழக்க போகிறார். திமுகவைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அமைச்சர் பதவியை இழக்க போவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார்.
அதேநேரம் அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பை சந்திக்கும் 3-வது எம்.எல்.ஏ.யாக பொன்முடி இருப்பார் என்கிறார்கள். இதற்கு முன்னதாக ஜெயலலிதாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர் . தற்போதைய நிலையில் பொன்முடிக்கு உள்ள வாய்ப்பு, தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்விலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்படி மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பதவி தப்பும். இல்லாவிட்டால் எம்எல்ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பொன்முடிக்கு பறிபோகும் நிலை உள்ளது.
பொன்முடிக்கு என்ன தண்டனை: ஊழல் தடுப்புச்சட்டத்தில் சிறை தண்டனை இல்லாமல், அபராதம் மட்டும் விதித்தாலும் கூட தகுதி இழப்பு ஏற்படும். சிறை தண்டனை பெற்றால், அந்த சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை ஆன நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டமாகும். அபராதம் மட்டும் என்றால் கூட, குற்றம் செய்தவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. அதேநேரம் பொன்முடிக்கு எதிரான வழக்கு 2018-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாகவும். எனவே அவருக்கு குறைந்தது ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிக்கிறார்கள். பொன்முடிக்கான தண்டனை நாளை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications