“அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி" - அமைச்சர் சிவசங்கர் தாக்கு
சென்னை: "அல்வா பாக்கெட் வைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை திருட்டுக் கடையாக்கியுள்ளார்" என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். "மக்களிடம் சென்று கேட்டால், திமுக அரசின் நலத் திட்டங்கள் பற்றி அவர்கள் சொல்வார்கள்" என பதில் கொடுத்துள்ளார் சிவசங்கர்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி, ஒரு அல்வா கவரை கொடுத்தார். அதில் திமுகவின் உருட்டு கடை அல்வா என்று அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல் மாதந்தோறும் மின் கணக்கீடு வாக்குறுதி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. திமுகவின் வாக்குறுதிகளை கேள்வி எழுப்பி உருட்டு கடை அல்வா என்று அச்சிட்டு வெறும் அல்வா கவரை அதிமுகவினர் காட்டினர்.
"திமுக ஆட்சியில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும். 2021-ஆம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார்" என்று அவர் கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய 'உருட்டு கடை அல்வா' என்ற பாக்கெட்டை வழங்கினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "இன்று அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு 'உருட்டு கடை அல்லா' என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுப்போம் என்றார்கள்.. கொடுத்தார்களா? செல்போன் கொடுத்தார்களா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்தார்.
மேலும், "அதிமுக ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவிடம் இருந்து எப்படி எடப்பாடி பழனிசாமி கையில் வந்தது என எல்லோருக்கும் தெரியும். அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது அல்வா பாக்கெட் வைத்து அரசியல் செய்கிறார். அல்வா பாக்கெட் வைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அடிக்க வேண்டிய நிலைக்கு அதிமுக சென்றுள்ளது" என்று விமர்சித்தார் அமைச்சர் சிவசங்கர்.
மேலும் பேசிய அமைச்சர் சிவசங்கர், "மக்களிடம் சென்று கேட்டால், திமுக அரசின் நலத் திட்டங்கள் பற்றி அவர்கள் சொல்வார்கள். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்கள் அமல்படுத்துகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும். அரசின் மீது குறை கூற முடியாமல் தோல்வி முகத்துடன் ஈபிஎஸ் வெளிநடப்பு செய்துள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications