“ஒரு பைசா கூட தரல”! கோவை மெட்ரோ எப்போ? வானதி கேள்விக்கு பட்டென பதில் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!
சென்னை: கோவை மெட்ரொ ரயில் திட்டம் பற்றி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்ப, மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தருமாறு பதிலடி கொடுத்துள்ளார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசின் 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், கோவையில் ரூபாய் 10,740 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூபாய் 11,368 கோடி மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் எப்போது பணிகள் தொடங்கும் என்றும் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
வானதி சீனிவாசனுக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் வருவதற்கு ஆர்வமாக உள்ள கோவை சட்டமன்ற உறுப்பினர், ஏன் இதுவரை மத்திய அரசு இதற்கு உரிய ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்பதை கேட்டுச் சொல்லலாம்.
கோவைக்கு அருகில் உள்ள கொச்சியில் மெட்ரோ ரயில் ஒப்புதல் அளித்த மத்திய பாஜக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஏன் மறுக்கிறது? இதுவரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவான 69 ஆயிரம் கோடி ரூபாய் முழுவதும் மாநில அரசின் சொந்த செலவிலேயே செயல்படுத்தப்பட்டது.
இதுவரை மெட்ரோ திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொடுக்கவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் மத்திய அரசிடம் விரைவில் கோவை மெட்ரோ ரயிலுக்கு ஒப்புதல் அளிப்பதுடன் அதற்கான நிதியையும் வழங்க வலியுறுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எழுந்து பேசிய வானதி சீனிவாசன், "சென்னை, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் குறித்த தககல்களை கொடுத்தால் நிச்சயமாக மத்திய அரசுடன் பேசி உதவி செய்யத் தயார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எந்தவிதமான அரசியலும் பார்க்காமல் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications