'வாவ்".. எவ்ளோ பெரிய கம்பெனி! தமிழ்நாடு வருதே -அசத்திட்டாரே தங்கம்! “ஸ்மார்ட்” என பாராட்டிய ஸ்டாலின்
சென்னை: ஜப்பானை சேர்ந்த நூறு ஆண்டுகள் பழமையான மிட்சுபிஷி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,891 கோடியை முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி அதற்கு அவர் அடிக்கல் நாட்டி உள்ளார்.
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மிட்சுபிஷி. இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்கள், லாரிகள், பேருந்துகள் உலகளவில் பிரபலமாக இருக்கின்றன. அதேபோல் இந்த நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் குளிர்சாத இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நூறு ஆண்டுகள் பழமையான இந்த இந்த மிட்சுபிஷி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீட்டில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெருவயல் கிராமத்தில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆலை அமைக்கப்படுகிறது. இதர்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து உரையாற்றிய அவர், "கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்துப் பார்த்தால், தொழில் துறை நிகழ்ச்சிகள்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் நான் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களையும், அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?" என்று நான்கேட்டுக்கொண்டே இருப்பேன்.
2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில், மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
உங்களது இந்தத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில், 1,891 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த உற்பத்தியில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரு முயற்சிகளை எடுத்து வருகிறது." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications