அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும்! ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்! ஸ்டாலின் விடுத்த வார்னிங்!
சென்னை: உண்மைக்கு யானையின் பலம் உண்டு என்றும் அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும் எனவும் எச்சரித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் வருமாறு;

''கடல்தான் தமிழ்நாட்டின் நடுப் பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு தீரர் கோட்டமாம் திருச்சியில் நேற்று நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A)வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.
பயிற்சிக் கூட்டப் பந்தலில் மட்டுமா கூட்டம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயிற்சிக் கூட்டம் நடைபெற்ற ராம்ஜி நகர் வரை கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், காவிரியில் புதுவெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் வாழ்த்தொலியில் உள்ளம் மகிழ்ந்தேன். பொன்னாடையும், புத்தகமும் வழங்கி அன்பை வெளிப்படுத்திய மக்களுக்கு நடுவே, கோரிக்கை மனுக்களுடன் இருந்தவர்களும் உண்டு. அவற்றை அக்கறையுடன் பெற்றுக் கொண்டேன்.
முதலமைச்சரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.
ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் வழிநெடுக நின்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மனுக்களை அளித்தார்கள். இவையெல்லாம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களே நமக்குத் தெரிவிப்பது போல இருந்தது.
பட்டா, சிட்டா, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக நீண்ட காலமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்கள் இரண்டாண்டுகளில் ஒரே ஒரு மனுவை "முதல்வரின் முகவரி"க்கு அனுப்பிவிட்டு சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்கள்.
நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்.
நம்மிடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.''












Click it and Unblock the Notifications