வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2! யுவன், ஜிவி பிரகாஷ் உள்பட அனுபவத்தை பகிர்ந்த இசையமைப்பாளர்கள்!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடரில் இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர், கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

எத்தனை பேர் பங்கேற்பு
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் பணிகள் நடந்து வந்தன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இசையமைப்பாளர்கள் யார் யார்
இதையடுத்து பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்களின் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களில் அனுபவம் குறித்து பேசும் வீடியோவும் ப்ரோமோவாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்படு தேறல் பருவம் 2ல் இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டவர்களின் இசையில் பாடல்கள் வெளிவர உள்ளன.

இசையமைப்பாளர்கள் கருத்து
இதுபற்றி இசையமைப்பாளர் வித்யாசாகர் கூறுகையில், ‛‛பாடல் வரிகளை படிக்கும்போது பூரிப்படைந்தேன்'' என்றார். ஜிவி பிரகாஷ் கூறுகையில், ‛‛பாடல் வரிகளை எனக்கு அனுப்பியபோதே அதை பார்த்து வியந்துவிட்டேன்'' எனவும், அனில் சீனிவாசன் கூறுகையில், ‛‛சாதாரண பாடலாக இது இல்லை'' என்றார். சைமன் கே கிங் கூறுகையில், ‛‛தமிழில் இவ்வளவு வார்த்தைகள் உள்ளதா என்பதை இப்போது தான் பார்க்கிறேன்'' என்றார். யுவன் சங்கர்ராஜா கூறுகையில், ‛‛நான் இசையமைத்த பாடலில், பாடல் வரிகள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படும்'' என்றார்.

பாடகர்கள், இயக்குனர்கள்
மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் பாடல்களை பாடியுள்ளனர். இயக்குனர்களை பொறுத்தமட்டில் இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications