மீனாட்சிபுரத்தில் பாஜக துள்ளுது.. நெல்லை திமிங்கலத்தை "வளைத்த" அதிமுக.. திகு திகு திருநெல்வேலி திமுக
சென்னை: திருநெல்வேலி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்லா முத்துச்சோழன்.. இது நெல்லை திமுகவினருக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்த துவங்கியிருக்கிறதாம்.. என்ன காரணம்?
வழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், மாற்று கட்சியிலுள்ளவர்களுக்கு வலையை வீசி, தங்கள் பக்கம் கொண்டுவருவது சாதாரண நிகழ்வுதான்.. தேர்தல் நெருங்க, நெருங்க, கட்சி தாவல்கள் அதிகமாகவே நடைபெறுவதும் சாதாரண நிகழ்வுதான்.

ஸ்டார் தொகுதி: ஆனால் ஒருசில ஸ்டார் தொகுதிகளில் மட்டும், முக்கிய தலைவர்கள், அல்லது புள்ளிகள், வேறு கட்சிக்கு தாவினால், அந்த தொகுதியே ஆட்டம் கண்டுவிடும்.. அப்படித்தான் நெல்லை தொகுதியும் பார்க்கப்பட்டு வருகிறது.
திமுகவிலிருந்து அதிமுகவுக்கு மாறிவிட்டார் சிம்லா முத்துச்சோழன்.. திமுகவின் மூத்த தலைவரான சற்குணபாண்டியனின் இளைய மருமகள் சிம்லா முத்துச்சோழன்.. இவருக்கு கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் சீட் தரப்பட்டது.. அப்போது ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்... 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவிடம் இவர் தோல்வியடைந்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும், 30 ஆயிரம் வாக்கு வித்தியாசம் என்பது, ஜெயலலிதாவையே கவனிக்க வைத்தது. காரணம், போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவது வழக்கம்.. ஆனால் சிம்லா முத்துச்சோழன் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் என்பது, அதிமுகவின் கவனத்தை திருப்பியது.
அதோடு சரி.. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால்தானோ என்னவோ, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
குற்றச்சாட்டு: மாற்று கட்சிக்கு தாவிய அடுத்த செகண்டே, திமுக மீது பழியை தூக்கி போட்டாராம் சிம்லா முத்துச்சோழன்... "உறுதியளித்தபடி ஸ்டாலின் நடந்துகொள்ளவில்லை, தனக்கு சீட் தரவில்லை.. எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன்" என்று தன்னுடைய வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசியிருந்ததும் அனைவரையும் கவனிக்க செய்திருந்தது.
35 வயதாகிறது சிம்லா முத்துச்சோழனுக்கு.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச்பார்க் கான்வென்டில்தான் படித்திருக்கிறார்.. நெல்லை கிறிஸ்தவ சமூக வாக்குகள் இவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை கட்சிக்கு நிறையவே உள்ளது. அதிமுகவில் சேர்ந்ததுமே, அவரை நெல்லை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நெல்லை: ஏற்கனவே நெல்லை திமுக நொந்து போயிருக்கிறது.. இப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது... திமுவினர் இந்த தொகுதியை மீண்டும் கேட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
இத்தனைக்கும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட பல முன்னணி திமுக நிர்வாகிகள் தயாராக இருந்தார்கள்.. முக்கியமாக, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக செயல்பட்டு வரும் கிரகாம்பெல், கடந்த எம்பி தேர்தலின்போதே நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ஆசைப்பட்டார்.. இந்த முறையும் ஆசைப்பட்டார். ஆனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி: இந்த நெல்லையில், அதிமுக மட்டுமே 7 முறை வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது... திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருவதால்தான், இந்த முறையும் அக்கட்சிக்கே தொகுதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக.
நெல்லை திமுக தொண்டர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதுடன், சோஷியல் மீடியாவிலும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.. இதனால், களப்பணியில் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா? என்ற சந்தேகமும் கூட்டணிக்குள் முளைத்திருக்கிறதாம். அதிமுக வலுவாக உள்ள தொகுதி என்பதுடன், சிம்லா முத்துச்சோழனுக்கு சீட் தந்துள்ளதால், இந்த முறை காங்கிரசுக்கே கடும்போட்டி இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
நயினார் பிடிவாதம்: அதைவிட முக்கியமாக பாஜகவின் ரோல் நெல்லையில் அதிகமாகவே உள்ளது.. நயினார் நாகேந்திரன், மீனாட்சிபுரம் உட்பட தன்னுடைய தொகுதியில் ஒரு வருடமாகவே பிஸியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.. ஏகப்பட்ட அதிரடிகளை செய்து மக்களின் கவனத்தை தன்பக்கம் குவிய வைத்துள்ளார்.
"இந்த முறையாவது இளைஞர்களுக்கு சான்ஸ் தாருங்கள்" என்று சொன்னாலும் நயினார் கேட்கவில்லையாம்.. சரத்குமாருக்காவது தொகுதியை விட்டுக்காடுங்கள் என்று சொன்னாலும் நயினார் கேட்கவில்லையாம். எப்படியாவது "தாமரை"யாக மலர்ந்து டெல்லிக்கு போய்விடுவது என்று பிடிவாதமாக இருப்பதால், நெல்லையை தட்டி தூக்க ரெடியாக விட்டாராம்.
பலத்த போட்டி: அந்தவகையில், அதிமுக + பாஜக + காங்கிரஸ் என பலத்த போட்டி நெல்லையில் எழுந்துள்ளது, தமிழக மக்களின் ஆர்வத்தை கிளறி விட்டுள்ளது.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications