தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி.. ஆலோசனை சொல்லுங்கள்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு 13 கட்சிகளில் 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றே ஆக வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வு விலக்கு மசோதா
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கடிதம் கொடுப்பதற்காக அனைத்து கட்சி எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. பல முறை அமித்ஷாவின் அலுவலகத்தில் காத்திருந்தும் தமிழக எம்பிக்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

மக்களாட்சியின் மாண்பு
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் 8-ஆம் தேதி கூட்டப்படும் என அறிவித்தார்.

அனைத்து கட்சி கூட்டம்
இந்த கூட்டத்தில் 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன், பாமக சார்பில் ஜிகே மணி பங்கேற்பு, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தளி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர்
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா மீது ஆளுநர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வைத்துள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்திய போதும் அவர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு
நீட் தேர்வுக்கு ஏழை மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. அதனால்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நீட் தேர்வு- சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும். சட்டசபையின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே மக்களாட்சியின் தத்துவம். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் இலக்காகும். எனவே,வரைவுத் தீர்மானத்தின் மீது உங்களது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக வானதி வெளிநடப்பு
மொத்தம் 13 கட்சிகளில் நீட் தேர்வு விலக்கிற்கு பாஜக சார்பில் கலந்து கொண்ட வானதி ஸ்ரீனிவாசன் வெளிநடப்பு செய்துள்ளார். நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால் அவர் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். மேலும் சமூகநீதிக்கு எதிராக நீட் தேர்வு இல்லை. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்றார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
இந்த நிலையில் 12 கட்சிகளின் பிரதிநிதிகளும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நாம் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.
Recommended Video

உள்துறை அமைச்சர்
நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காதது தொடர்பாக பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன், உள்துறை அமைச்சர் நம்மை சந்திக்காதது அனைத்து கட்சிக்கும் அவமானம் தான், ஆனால் இனமானத்திற்காக அவமானம் படலாம். மீண்டும் சந்திக்க முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications