நீங்க தூக்கி பிடிக்கிற மனுதர்மத்தை எதிர்த்தவரே வள்ளலார்... சிக்கலானது வானதி சீனிவாசனின் வாழ்த்து!
வானதி சீனிவாசனின் தைப்பூச வாழ்த்து சர்ச்சையாகி உள்ளது.
: தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் தைப்பூச வாழ்த்து செய்தி இப்போது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தூக்கி பிடிக்கும் மனுதர்மத்தை எதிர்த்த வள்ளலார் குறித்து வாழ்த்து செய்தியில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவரும் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தைப்பூசத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். அதில், இன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர தினம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான முருக பக்தர்களுக்கு தைப்பூசம் மிகமிக முக்கியமான திருவிழாவாகும். தமிழ்க் கடவுள் என்று முருகப் பெருமானை தமிழர்கள் போற்றி வணங்குகிறார்கள். தமிழர்களின் வாழ்வியலில் முருகப் பெருமானுக்கு தனி இடம் உண்டு.
தைப்பூசத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அனைத்தும் அடங்கிய ஞான களஞ்சியமான திருவருட்பாவை அருளிய, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஜோதியில் ஐக்கியமானார். அதனைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பச தினத்தன்று, அவர் ஜோதியில் கலந்த, வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வள்ளலாரை வழிபடுகிறார்கள்.
உலகம் மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டு, 'மனிதநேயம்' பேசிக் கொண்டிருந்தபோது, அதையும் தாண்டி, மனிதநேயத்தோடு, அனைத்து உயிர்களை சமமாக போற்றும், 'உயிர்மைநேயத்'தை வலியுறுத்தியவர் வள்ளலார். அதனால்தான், 'வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன்' என்ற அவர் சொற்கள், கோடிக்கணக்கான மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புனிதமான தைப்பூச நாளில் முருகப்பெருமானையும், திருஅருட்பிரகாச வள்ளலாரை வணங்குகிறேன். தைப்பூசம் கொண்டாடும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு எனது வாழ்த்துகள். முருகப் பெருமானின் அருள் நம்மை என்றும் காக்கும். வெற்றி வேல். வீர வேல். என பதிவிட்டிருந்தார். வள்ளலார் படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் உருவாகி உள்ளது. வானதி சீனிவாசனின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே,Raja Saravanaar என்ற நெட்டிசன் மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி! ஆனால் எங்கள் தலைவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற ஒன்றை நிறுவி சமூக நீதிக்கு வித்திட்டவர்.
"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே."
உங்கள் கட்சி தூக்கிப்பிடிக்கும் மனுதர்மதிற்கு எதிரான கொள்கை கொண்டவர் என கொந்தளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications