நித்யானந்தாவின் ஆசிரமத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல்.. சிசிடிவி பதிவை கொண்டு தேடும் போலீஸ்
சென்னை திரிசூலம் அருகேவுள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது தாக்குதல்
சென்னை: சென்னை திரிசூலம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார் நித்யானந்தா. இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். இவர் தனது ஆசிரமத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து நித்யானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அவர் கைலாசா எனும் தீவை விலை கொடுத்து வாங்கியுள்ளதாக ஆன்லைனில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நாட்டுக்கென தனிக் கொடி, பாஸ்போர்ட், கரென்சி உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

ஆன்லைன்
அவ்வப்போது ஆன்லைன் வீடியோவில் தோன்றும் நித்யானந்தா பக்தர்களுக்கு சத்சங்கம் அளித்துவிட்டு மறைந்துவிடுவார். இந்த இணையத்தின் ஐபி அட்ரஸை வைத்துக் கூட அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவரை எப்படியாவது நாடு கடத்த வேண்டும் என்று போலீஸார் முனைப்பு காட்டி வந்தனர்.

சத்சங்கம்
இதனிடையே அவர் சத்சங்கத்தில் காட்சி கொடுக்காததாால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் சில மாதங்கள் கழித்து அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் சுவாசிக்க கஷ்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

கைலாசா நாடு
அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்ததாக ஜனவரி 11 ஆம் தேதி நித்யானந்தா அறிவித்திருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியாவிட்டாலும் நாடு முழுவதும் உள்ள ஆசிரமங்களில் பணிகள் சரியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்லாவரம்- திரிசூலம் அருகே உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தீவிரம்
இது தொடர்பாக நித்யானந்தாவின் சீடர் பிரபானந்தா அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அடையாளம் காணும் பணிகளும் நடைபெறுகின்றன. ஆசிமரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரமத்தில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications