எங்களை அசைத்து பார்க்க முடியாது.. பாஜக வேறு, ரங்கசாமி வேறு கிடையாது தம்பி – விஜய்க்கு தமிழிசை பதில்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தமிழ்நாடு அரசியல் களம் மட்டுமல்லாமல் புதுச்சேரி அரசியல் களமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் புதுச்சேரி பயணம் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி இடையே பனிப்போரை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பாஜக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் ரங்கசாமி பாஜக உடன் இணக்கமாக பணியாற்றுகிறார் எங்களை அசைத்து பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்வரும் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி சென்றிருந்தார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாராட்டிவிட்டு பாஜகவை விமர்சித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்க வேற.. அவங்க வேற இல்ல
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம், "தம்பி விஜய் புதுச்சேரி சென்றது மகிழ்ச்சி. புதுச்சேரி மக்கள் எனக்கு எப்போதும் விருப்பமானவர்கள். அங்கு காவல்துறையும் நன்றாக பணியாற்றுவார்கள். புதுச்சேரி காவல்துறையினரை பாராட்டியதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் அங்கு சென்று ஏதோ புதுச்சேரி அரசும், மத்திய அரசாங்கமும் வேறு வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்த வேறுபாட்டை விஜய் தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி முதல்வரை பாராட்டியதற்கு விஜய்க்கு நன்றி. ஆனால் முதல்வர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் என்பதை அவர் உணர வேண்டும். பாஜகவுக்கும், முதல்வருக்கும் வேறுபாடு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி சென்றபோது, கல்வி, தொழில், சுற்றுலா, ஆன்மீகம் உள்ளிட்டவற்றில் புதுச்சேரியை பிரம்மாண்டமாக மாற்ற வேண்டும் என்று பேசினார். அதற்கான புதுமை திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.
பாஜகவின் புதுச்சேரி பாசம்
12 வருடங்களாக புதுச்சேரியில் முழு பட்ஜெட்டே இல்லை. இடைநிலை பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் ரூ.2,000கோடி உதவியுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எல்லா அரசுப் பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றி, சாமானிய மக்களுக்கும் சமச்சீர் கல்வியை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டை 10 சதவீதமாக மாற்றினோம்.
புதுச்சேரியில் விமான நிலையம் இயங்க தொடங்கியது. சாலைகள் வசதிகள் அதிகம் போடப்பட்டன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் ஒரு சாலையை திறந்து வைத்தார். இதன் மூலம் 2 மணி நேரமாக இருந்த பயணம், தற்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை கிளை காரக்காலில் தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களில் புதுச்சேரி முன்னேறிய மாநிலமாக உள்ளது. ரேஷன் பொருட்களுக்கான பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் செல்கிறது.
முன்னேறிய புதுச்சேரி
மக்கள் சிறுதானியம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் அப்படியல்ல, ரேஷன் கடையில் என்ன கொடுக்கிறார்களோ அதை மட்டுமே வாங்க முடியும். புதுச்சேரி அனைத்து வகையிலும் முன்னேறியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜக உடன் இணக்கமாக பணியாற்றுகிறார். பாஜகவை குறை சொல்லி என்ஆர் காங்கிரஸ் ஆட்சியை விஜய் அசைத்து பார்க்க முயற்சி செய்கிறார். அது நடக்காது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications