“அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. தமிழ்நாட்டை ஆளமுடியாது" பகிரங்க சவால் விடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துட்டு வாங்க.. ஒரு கை பார்ப்போம்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம்.
திமுகவின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது. திசை மாறி சென்றிருப்பவர்கள், திசைகாட்டியாக இருக்கும் எங்களை பார்த்து புலம்ப வேண்டாம்.
தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படலாம் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சிகளாக செயல்படுகின்றன. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்களோடு உறவாடி தமிழ்நாட்டை அடகுவைக்கும் எண்ணத்தை கொண்டுள்ளனர். நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி திட்டம் நிராகரிப்பு, வக்பு திருத்தச்சட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றுதிரட்டுதல் போன்றவற்றில் நாம்தான் இந்திய அளவில் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம். மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக உள்ளது.
அமித் ஷா சொல்ல முடியுமா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?
மத்திய பாஜக அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசே வெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம்.
இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்.
தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது.
அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான்.
எந்த ஷா வந்தாலும்
இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல.. எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications