யாரும் செல்ல கூடாது? சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! பழைய "ஜெ" ஸ்டைலில்.. ஆளுநர் மாளிகையில் என்ன நடந்தது
சென்னை: முன்னாள் சென்னா ரெட்டி காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடு ஒன்றை முதல்வர் ஸ்டாலினும் எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி முதல்வர் ஸ்டாலின் மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது. ஆளுனர் ஆர். என் ரவி இன்று அவசர அவசரமாக டெல்லி செல்லும் அளவிற்கு நிலைமை கைமீறி சென்றுள்ளது.
முன்னதாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதினார். நேற்று திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது.

விமர்சனம்
இந்த கடிதத்தில், கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார். , இரண்டாவதாக, கவர்னர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டுகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தவும் ஜனாதிபதியை, முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசர அவசரமாக டெல்லிக்கு செல்கிறார்.

டெல்லி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார். சட்டசபை உரை சர்ச்சையான நிலையில் ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பரபரப்பான சூழலில் ஆளுநர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது கவனம் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் டாப் தலைவர்கள் சிலரை ஆளுநர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் சென்னா ரெட்டி காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடு ஒன்றை முதல்வர் ஸ்டாலினும் எடுத்துள்ளார். 1993 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தார். அப்போது சட்டசபையில் இதேபோல் ஆளுநருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோதல் ஏற்பட்டது. அதோடு சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார்.

என்ன நடந்தது?
இதனால் சட்டசட்டையில் மிகப்பெரிய மோதலே அப்போது வெடித்தது. அதன்பின் தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையில் சட்டசபையிலேயே மோதல் வெடித்தது இல்லை. முக்கியமாக மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த வைத்தார் ஜெயலலிதா. திண்டிவனம் அருகே அவரை வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் அழுத்தம் கொடுத்தனர். ஆளுநர் சென்னா ரெட்டி அப்போதெல்லாம் வெளியே வருவதே பெரிய பிரேக்கிங் செய்தியாக இருந்தது. மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமின்றி அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

ஸ்டாலின்
தற்போது அதே பாணியில் ஸ்டாலினும் நேற்று ஆர். என் ரவி நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று முடிவு எடுத்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள் யாரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், திமுக எம்எல்ஏக்களை மட்டுமின்றி அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் பொங்கல் விருந்துக்கு போகக் கூடாது என்று உத்தரவும் அரசு தரப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு அதிகாரிகள் யாரும் பொங்கல் விருந்திற்கு செல்லவில்லை. அரசு சார்பாக அடையாளத்திற்கு கூட ஒருவரும் அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக முதல்வர் - ஆளுநர் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications