தமிழ்நாட்டில் 75,064 பூத்களில் எங்கும் மறுவாக்குப்பதிவு கிடையாது.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க தேர்தலிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் 44,376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் லைவ் வெப்காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்பட்டது. 23 ஆம் தேதி காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரி வாக்குப்பதிவு 85 சதவீதமாக உள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவின்போது சில இடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. அதைத்தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சுமூகமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எங்கும் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடி மையங்களில் எதிலும் மறுவாக்குப்பதிவு இல்லை. வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றதால் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. வாக்குப்பதிவு நாளில் நடந்த சில அசம்பாவிதங்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை என்றால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடும். இது பொதுவாக வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே நடத்தி முடிக்கப்படும்.
இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 - பிரிவு 58, 58A, சில காரணங்களுக்காக மறுவாக்குப்பதிவு உத்தரவிடப்படலாம். வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்லது VVPAT கருவி எதிர்பாராத விதமாகப் பழுதடைந்தாலோ, அல்லது யாராவது அதனைச் சேதப்படுத்தியிருந்தாலோ அந்த பூத்தில் பதிவான வாக்குகளை எண்ண முடியாது. இத்தகைய சூழலில் மறுவாக்குப்பதிவு நடக்கும்.
வாக்குச்சாவடிக்குள் புகுந்து யாராவது வலுக்கட்டாயமாகப் பிறர் பெயரில் கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்திருப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட பூத்தின் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்படும். அந்த வாக்குசாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.
அரசியல் கட்சியினரோ அல்லது சமூக விரோதிகளோ வாக்குச்சாவடியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து (Booth capture) அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குகளைப் பதிவு செய்திருந்தால் அல்லது வாக்கு இயந்திரத்தைத் தூக்கிச் சென்றிருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.
வாக்குப்பதிவு நாளில் பெரும் கலவரம் ஏற்பட்டு மக்கள் அச்சத்தால் வாக்களிக்க முடியாமல் போயிருந்தாலோ, அல்லது புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் வாக்குப்பதிவு பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலோ தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்படும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு பூத்திலும் உள்ள டைரி மற்றும் ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்வார். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், உதாரணமாக பதிவான வாக்குகளுக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள கையெழுத்துகளுக்கும் வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால் அவர் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைப்பார்.
தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவை அறிவித்தவுடன், அந்த குறிப்பிட்ட பூத்தில் உள்ள வாக்காளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மறுவாக்குப்பதிவு நடக்கும் நாளன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். முந்தைய வாக்குப்பதிவில் ஏற்கனவே ஆள்காட்டி விரலில் மை இருப்பதால் அடையாளம் காண இது உதவும்.
மறுவாக்குப்பதிவு என்பது ஒட்டுமொத்தத் தொகுதிக்கும் கிடையாது. முறைகேடு அல்லது பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே நடத்தப்படும். இந்த வாக்குகளும் மற்ற வாக்குகளுடன் சேர்த்தே எண்ணப்படும். தமிழ்நாட்டில் எங்கும் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், குழப்பம் இன்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications