கூகுள் பே, போன் பே யூஸ் பண்ணுறீங்களா? அக்கவுண்ட் டிஆக்டிவேட் ஆக வாய்ப்பு இருக்கு! உடனே செக் பண்ணுங்க
சென்னை: கூகுள் பே, போன் பே உள்பட யுபிஐ ஐடி மூலமாக பண பரிவர்த்தனை செய்து வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தான் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை என்.பி.சி.ஐ அமல்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
யுபிஐ பயன்பாடு இந்தியாவில் பெருமளவு அதிகரித்துள்ளது. ஷாப்பிங் மால்கள் முதல் சாலையோர பெட்டிக்கடை வரை யுபிஐ பயன்பாடு வந்து விட்டது. பர்சில் 10 பைசா இல்லை என்ற கவலை எல்லாம் தற்போது இல்லை. வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் போதும். சாக்லேட் முதல் தங்க நகை வரை யுபிஐ மூலமே பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

National Payment Corporation Of India எனப்படும் என்பிசிஐ - அளித்த தகவலின் படி பல லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. பணம் அனுப்புவது எளிது.. சில்லறைக்கு கஷ்டப்பட வேண்டாம் என்பதால் பெரும்பாலானவர்கள் யுபிஐ பயன்படுத்தியே பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
புதிய அறிவிப்பு: ஒரு வங்கிக் கணகில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் சரி.. சில வினாடிகளில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் மூலமாக பணத்தை அனுப்பி விடலாம். இதனால், பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தற்போது யுபிஐ மூலமாகவே நடைபெறுகிறது. வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை வைத்து யுபிஐ இயங்குகிறது.
யுபிஐக்கென தனி ஒரு ஐடி கிரியேட் செய்து அதன் மூலமும் பணத்தை அனுப்பவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை என்.சி.பி.ஐ வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ஓராண்டுக்கும் மேலாக செயல்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்கள் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒரு வருடத்திற்கு மேலாக: புதிய விதிகளின் படி, TPAPs எனப்படும் சேவை வழங்கும் மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் பேமேண்ட் சேவைகள் வழங்குபவர்கள் (PSPs) செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடிக்களில் இருந்து ஒரு வருடத்திற்கு மேலாக நிதி பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத இந்த ஐடிக்களை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அபாயங்களை தடுக்க: 90 நாட்களுக்கும் மேல் பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்களை புதிய பயனர்களுக்கு அளிக்களாம் என்று டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதால் யுபிஐ ஐடியில் பண பரிவர்த்தனை வேறு நபர்களுக்கு செல்வதை தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், பயனர் தனது பழைய எண்ணை யுபிஐ ஐடியில் இருந்து நீக்காமல் இருந்தால், அதே எண்ணை வாங்கியிருக்கும் வேறு நபர்களுக்கு பணம் கிரெடிட் ஆக வாய்ப்பு உள்ளது. இத்தகைய அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கவே இந்த ஆக்ஷனை டிராய் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications