நீங்க மீண்டு வருவீங்கம்மா.. விஜயலட்சுமியிடம் சொன்ன "ஜெ".. உணர்ச்சிவசப்பட்ட ஓபிஎஸ்.. பிளாஷ்பேக்!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் மரணத்தையொட்டி.. அவருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையில் 9 வருடங்களுக்கு முன் நடந்த சந்திப்பு ஒன்றை குறித்து அதிமுகவினர் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
மருத்துவமனையில் வயிறு உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி நேற்று மரணம் அடைந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயலட்சுமிக்கு காலை 6.45 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் விஜயலட்சுமி நேற்று மரணம் அடைந்தார். தனது மனைவியின் மரணம் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் நொறுங்கி போனார். மருத்துவமனையிலேயே உடைந்து கண்ணீர்விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

சசிகலா
நேற்று ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து இரங்கல் தெரிவிப்பதற்காக அரசியல் தலைவர்கள் பலர் வந்து இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பிற்பகலில் சசிகலாவும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் வந்து சந்தித்து பேசினார். ஓ. பன்னீர்செல்வம் கையை பிடித்து இரங்கல் தெரிவித்த சசிகலா அவரிடம் ஆறுதலாக பேசினார்.

9 வருடம் முன்
நேற்று இந்த சம்பவங்கள் நடந்த போது பலரும் 2012ல் நடந்த இதேபோன்ற நிகழ்வு ஒன்றை உருக்கமாக இணையத்தில் நினைவு கூர்ந்து இருந்தனர். 9 வருடங்களுக்கு முன் 2012 ஏப்ரல் 12-ம் தேதி ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க ஜெயலலிதா வந்த தருணம் அது. ஓ. பன்னீர்செல்வம் அன்று முகம் முழுக்க வருத்தத்தோடு, கனத்துப்போய் நின்ற நேரம் அது.

அனுமதி
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் 2012ல் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம்தான் கட்சியில் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக முக்கியமான தலைவராக இருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் மனைவியை கவனித்துக்கொண்டு ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது ஜெயலலிதா திடீரென மருத்துவமனைக்கு வந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.

விசாரிப்பு
உள்ளே வந்த ஜெயலலிதா படுக்கையில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து.. எப்படிம்மா இருக்கீங்கா.. கவலைப்பட வேண்டாம் நீங்க மீண்டு வருவீங்கம்மா என்று உருக்கமாக பேசினார். அதோடு விஜயலட்சுமி கையை பிடித்து உருக்கமாக ஜெயலலிதா ஆறுதல் வார்த்தைகளை கூறினார். இதை பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்த ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கையும், அசுவாசமும் கொண்டு லேசாக முகம் மலர்ச்சி அடைந்தார்.

போதும் மேடம்
ஜெயலலிதாவின் திடீர் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜயலட்சுமி.. நீங்க வந்ததே போதும் மேடம்.. நான் சீக்கிரம் மீண்டு வந்துவிடுவேன் என்று விஜயலட்சுமி கூறினார். அதேபோல் சில நாட்களில் விஜயலட்சுமி மீண்டும் வந்தார். நேற்று மருத்துவமனையின் மனைவியின் இறப்பிற்கு பின் ஓபிஎஸ் கலங்கி நின்றாரே அதேபோல்தான் அன்றும் மனைவியின் சிகிச்சையின் போது ஓ. பன்னீர்செல்வம் கலக்கத்தோடு நின்று கொண்டு இருந்தார்.

சந்திப்பு
9 வருடத்திற்கு முன் நடந்த இந்த சந்திப்பின் போது ஜெயலலிதாவிற்கு பின் பக்கம் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் நின்று கொண்டு இருந்தார். அப்போது எபப்டியாவது அதிமுகவில் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என்று அவர் ஏங்கி நின்ற தருணம். திரும்பி செல்லும் போது ரவீந்திரநாத்திடம் ஜெயலலிதா விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்றார். நேற்றும் கூட ஓபிஆர்தான் வந்த தலைவர்களை எல்லாம் கவனித்தார்.

உருக்கம்
அன்று விஜயலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் ஜெயலலிதா முதல் ஆளாக சென்று மருத்துவமனையில் பார்த்தது அதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று விஜயலட்சுமியின் மறைவிற்கு பின் அதிமுகவினர் பலரும் இந்த சந்திப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்து இருந்தனர். ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் முதல் நபராக அவர்தான் மருத்துவமனையில் இருந்திருப்பார் என்று அதிமுகவினர் பலர் பழைய சந்திப்பு குறித்து உருக்கமாக பேசி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications