ஓவர்நைட்டில் "ஓவர் வெயிட்".. வினேஷ் போகத் தகுதி நீக்கமா? ஓபனா விசாரியுங்க.. கிளம்பி வந்த ஜவாஹிருல்லா
சென்னை: வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மூத்த தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் (அதாவது கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக தகவல்) இருப்பதாக கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எடை அதிகரிப்பு: தொடர்ந்து 3 போட்டிகளில் பங்கேற்றதால், அவர் எடுத்துக்கொண்ட ஊட்டசத்துக்கள் காரணமாக, நேற்று இரவு முதலே தோராயமாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் செய்திருந்தார்.
இன்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு எடையை சோதனை செய்தபோது, தேவையான எடையை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறியிருக்கிறார். எனினும், எடையை குறைக்க அவருக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியத் தூதுக்குழு ஒலிம்பிக் சங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.
இன்னல்கள்: கடந்த 24 மாதங்களாகவே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்து வந்தார் வினேஷ் போகத்.. எத்தனையோ கட்ட இன்னல்களுக்கு பிறகுதான் பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிற்கு வினேஷ் முன்னேறி இருந்தார்.. இப்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு, பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
மல்யுத்தம்: இது தொடர்பாக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார்.
தகுதி சோதனையில் நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சரியான எடை: நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளின் போதும் முன்னும் பின்னும் எடை சரியாக இருந்திருக்கிறது. இன்று மட்டும் 100 கிராம் எடை கூடியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. பயிற்சியாளர் குறித்தும் இப்போட்டியில் அவர் சந்தேகம் எழுப்பி இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது குறித்து மக்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானது. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
எடை குறைப்பு: ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பசி, தூக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது எப்படி என தங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதைப் பிடிக்காதவர்கள் செய்த சதியாக இதைப் பார்ப்பதாகச் சொல்லியிருப்பதை எளிதில் புறந்தள்ள முடியாது.
வினேஷ் போகத் அவர்களின் கடந்த கால அரசியல் போராட்டங்களை மனதில் கொண்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நெறியாளர்கள் பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புறக்கணிப்பு: இது போன்ற திறமைசாலிகள் ஒருகாலும் புறக்கணிக்கப்படக்கூடாது. வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டிருந்தாலும் மக்கள் மனங்களைவென்று இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை" என்று தெரிவித்துள்ளார் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications