இங்க ஓபிஎஸ்.. அங்க ராமதாஸ்.. என்ன 2 பேருமே இப்படி பேசுறாங்க.. இபிஎஸ்ஸுக்கு பறக்கும் பளீர் சிக்னல்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு பேருமே தமிழக முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து பாராட்டி வருகின்றனர்... எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மட்டும் இதில் தனித்து விடப்பட்டது போன்ற சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. கொரோனா கேஸ்கள் மிகவும் அதிகமாக இருந்த போதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி, கேஸ்களை குறைத்து, ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்தி தற்போது வேக்சின் போடுவதில் புதிய வேகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டி வருகிறார்.

எதிர்க்கட்சி
முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ஆட்சியை பலமுறை பாராட்டி உள்ளார். தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு மீட்டிங்கில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நன்றி
தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். ஒரு பக்கம் ஸ்டாலினுக்கு அடிக்கடி அறிக்கைகள் மூலம் கோரிக்கைகள் வைக்கும் ஓ.பி.எஸ், ஒவ்வொருமுறையும் தனது கோரிக்கை ஏற்கப்படும் போதும், அல்லது அரசு நல்ல முடிவு எடுக்கும் போதும் அதை பாராட்டி வருகிறார். இன்னொரு பக்கம் பாமக நிறுவனர் ராமதாஸும் திமுக ஆட்சியை பாராட்டி வருகிறார்.

பாராட்டு
இன்று திமுக ஆட்சி குறித்து ட்வீ ட் செய்த ராமதாஸ், இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை. பெங்களூருடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும், என்றார்.

அட ஏன் இப்படி
ராமதாஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழக அரசை பாராட்டி உள்ளார். கொரோனாவிற்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, அதன்பின் பெண்களுக்கு இலவச மாநகர பஸ் உள்ளிட்ட 5 திட்டங்கள் என்று முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகளை ராமதாஸ் வெளிப்படையாக பாராட்டினார். செங்கல்பட்டு வேக்சின் உற்பத்தி மையத்திற்கு ஸ்டாலின் சென்றதை ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று அன்புமணி ராமதாசும் பாராட்டினார்.

இபிஎஸ்
உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் கூட திமுக ஆட்சியை பாராட்டி வருகிறார்கள். தற்போது எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து வருகிறார். இபிஎஸ் மட்டுமே ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மட்டும் இதில் தனித்து விடப்பட்டது போன்ற சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.

எப்படி
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை ஹைகோர்ட்டே பாராட்டி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி வருகிறார். இதனால் அதிமுகவிற்குள்ளும், எதிர்க்கட்சி கூட்டணிக்குள் சரியான ஒற்றுமை இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு இக்கட்டான சூழ்நிலையில் நன்றாக செயல்படும் அரசை பாராட்ட மனமின்றி விமர்சனம் செய்வதும் இபிஎஸ்ஸுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளது.

கூட்டு
தனது கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு இருக்கும் போது, தேவையின்றி ஆளும் கட்சியையும் இபிஎஸ் தற்போது பகைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ்ஸோ ஆட்சியை விமர்சிக்காமல், தேவையான கோரிக்கைகளை வைத்து, அதை நிறைவேற்றி, நன்றியும் சொல்லிவிடுகிறார். எதிர்ப்புகள் இல்லாத, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி தலைவர் போல ஓபிஎஸ் செயல்படுகிறார்.

நாகரீகம்
திமுகவை தீவிரமாக எதிர்த்துவந்த ராமதாசும் கூட அரசியல் நாகரீகம் கருதி ஆட்சியை பாராட்டுகிறார். கொரோனா காலத்தில் ஆளும் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்று கிளியர் சிக்னலை ஓபிஎஸ், ராமதாஸ் கொடுத்துள்ளனர். இது மக்கள் இடையிலும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவினரும் கூட ஓபிஎஸ், ராமதாஸை பாராட்டி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்யாமல் கொரோனா மீது மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்.

கேள்வி
அதோடு எடப்பாடி பழனிசாமிக்கு அவர் இருந்தே அதே அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கீடு செய்து ஸ்டாலின் நாகரீகமாக செயல்பட்டுள்ளார். ஆனால் இபிஎஸ் மட்டும் 20 நாட்களே ஆன திமுக அரசை தனியாக விமர்சனம் செய்வது அவருக்கே எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டு வரும் நிலையில் இபிஎஸ் மட்டும் ஏன் இப்படி அரசை விமர்சிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications