திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததால்.. மிகப்பெரிய பிரச்சனை நயினார் நாகேந்திரனுக்கு தான்.. எப்படி?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணந்திருப்பதால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மிகப்பெரிய சறுக்கல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருவருமே மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஓபிஎஸ் பின் பெரும்பாலான முக்குலத்தோர் சமூக ஆதரவு வாக்குகள் திரளும் என்றும் கருதப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டதற்கு பின் அவரின் சமூக கணக்கும் ஒரு காரணமாக அமைந்தது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறுவது எளிதாக இருக்காது என்று கருதப்பட்டது.

அதேபோல் ஓபிஎஸ் இடத்தை நயினார் நாகேந்திரனை வைத்து சமாளித்து கொள்ளலாம் என்றும் அதிமுக, பாஜக தலைமை கணக்கு போட்டது. இதன் காரணமாகவே தென் மாவட்டங்களில் நயினார் நாகேந்திரன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படியான சூழலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.
இதன் காரணமாக மதுரை, தேனி, பெரியகுளம், நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்களின் கணிசமான ஆதரவு திமுக பக்கம் திரும்பலாம். கடந்த முறை தென் மாவட்டங்களில் அடைந்த வெற்றியை இம்முறை திமுகவால் தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. விஜய்யின் வருகையால் சிறிய வாக்குகளை கூட இழக்க திமுக விரும்பவில்லை.
இப்படியான சூழலில் தென் மாவட்டங்களில் தொகுதிக்கு 2 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றுக் கொடுக்க கூடிய ஓபிஎஸ் தரப்பு திமுகவில் இணைந்திருப்பது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நேரடி பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது.
ஏனென்றால் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் இருந்து மாறி சாத்தூர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வந்தார். இந்த இரு தொகுதிகளிலும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகமாக இருக்கிறது. தற்போது நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நேரடியாகவே ஓபிஎஸ் திமுகவால் முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இன்னும் சொல்லப் போனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக திமுகவால் எளிதாக விஜய பிரபாகரன் அல்லது ஓபிஎஸ்ஸை நிறுத்த முடியும் என்ற சூழல் அமைந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தினாலே, திமுகவின் வெற்றி சுலபமாகும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications