தேனியில் டிடிவி தினகரன் போட்டி? லோக்சபா தேர்தலில் எதிர்க்க போகும் மன்சூர் அலிகான்! பரபர அறிவிப்பு
சென்னை: அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் டிடிவி தினகரனை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 2வது அணியாகவும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 3வது அணியாகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4வது அணியாகவும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இதில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி அணியாக களமிறங்க திட்டமிட்டு வருகிறது. இதற்கு தனியாக கூட்டணி அமைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதிமுகவுக்கு பதிலாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாஜக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் களமிறங்கினால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நடிகரும், தமிழ் தேசிய புலிகள் அமைப்பினர் நிறுவன தலைவருமான மன்சூர் அலிகான் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1999ல் புதிய தமிழகம் சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன் முதலில் களம் இறங்கிய தினகரன் ஜெயலலிதாவின் பெயரால் வெற்றி பெற்றார். ஆனால் ஜெயலலிதாவை எப்படி ஒழித்தார்கள் எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு நயவஞ்சகம் செய்த மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்தனர்.
ஆலமரமான அன்பின் ஆண்டாளான ‛‛ஜெயலலிதாவை வேரடி மண்ணோடி நாடகமாடி ஆளுநர் உள்பட யாரையும் பார்க்க விடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்லி மக்களோடு மக்களாக நின்று 1999ல் நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வருகிறேன்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய சூழலில் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இருக்கிறார். இவர் மீண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் இருந்து போட்டியிட முயற்சிக்கிறார். இத்தகைய சூழலில் டிடிவி தினகரன் தேனியில் களமிறங்குவாரா? என்பதில் சந்தேகமே. இருப்பினும் பெரியகுளம் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து டிடிவி தினகரன் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் மீண்டும் அவர் அங்கு போட்டியிடலாம் எனவும் தகவல்கள் பரவுகின்றன. அப்படி டிடிவி தினகரன் தேனியில் களமிறங்க விரும்பினால் கூட்டணி அடிப்படையில் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஒப்புக்கொள்வாரா? அப்படி ஒகே சொன்னால் ரவநீ்திரநாத் எம்பி எங்கு போட்டியிடுவார்? என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதற்கு விடையறிய நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்












Click it and Unblock the Notifications