Exclusive திருப்பதி லட்டுல விலங்கு கொழுப்பு கலப்படமா? “இந்த பாவம் சும்மா விடாது” கொதிக்கும் மக்கள்!
சென்னை: ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்புகள் இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுத்தது. ஆனால், இதுதொடர்பான ஆய்வக ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில், ஒன் இந்தியா சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
திருப்பதி என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கும் முதலில் நினைவில் வருவது லட்டு தான். திருப்பதி லட்டு என்றாலே, நெய் மணக்க, முந்திரி திராட்சை மணக்க சுவையாக இருக்கும். அனைவரையும் கவர்ந்த திருப்பதி லட்டு தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை அனைவரையும் பதற வைத்துள்ளது.

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி, "சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது.
எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகமான கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (NDDB CALF) அறிக்கையின் படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆய்வு செய்த அறிக்கை உறுதி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக நமது ஒன் இந்தியா சார்பில் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டோம். அப்போது பலரும், இது உண்மை என்றால் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
"கடவுள் விஷயத்தில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. ஆனால், அப்படி உண்மையிலேயே நடக்காமல் வேண்டுமென்றே பிரச்சனை செய்யக்கூடாது. விலங்கு கொழுப்பு கலந்திருந்தால் தவறு. சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும்," என சென்னையைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் தெரிவித்துள்ளார்.
"சாமி விஷயத்தில் அசைவமான விலங்கு கொழுப்புகளை கலப்பது தவறானது. கோவில் பிரசாதத்திலேயே இப்படி கலப்படம் செய்தால் மக்கள் எப்படி நம்புவார்கள். அப்படி செய்திருந்தால் அது பாவம், அப்படி செய்திருந்தால் அந்தப் பாவம் ஜெகன் மோகன் ரெட்டியை சும்மா விடாது" என சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவிலான திருப்பதி. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடம். அங்கு தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் எப்படி விலங்கு கொழுப்பை கலக்க முடியும்? இது அரசியல் நோக்கத்திற்காக சந்திரபாபு நாயுடு வைக்கும் குற்றச்சாட்டாகவே தெரிகிறது" என சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications