பல்லாவரத்தில் எச்.ராஜா வரும்போது "பெரியார் வாழ்க" கோஷம்! பதிலுக்கு எழுந்த மோடி வாழ்க கோஷம்! பரபர
சென்னை: பிரதமர் மோடி நிகழ்ச்சி நடக்கும் பல்லாவரம் மைதானத்தில் திமுக பாஜகவினர் மாறி மாறி கோஷமிட்டு வருவதால் அங்கே பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தென்னக மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ளார். முதலில் இன்று தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அவர் பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கே ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இது 1.36 லட்சம் சதுர மீட்டரில்கட்டப்பட்டுள்ளது. இது சென்னையில் விமான போக்குவரத்தை முற்றிலுமாக மாற்றிப் போடப்போகிறது. இந்த புதிய முனையத்தின் மூலம் இனிமேல் சென்னை ஏர்போர்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் 3 கோடி பயணிகளைக் கையாள முடியும்.
அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் சென்றடைந்தார். அங்கே பலரும் எதிர்பார்க்கும் சென்னை கோவை 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மூலம் வெறும் 5.50 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவைக்குச் சென்றடையலாம்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளனர். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடி பல்லாவரம் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கே பிரதமர் மோடி நிகழ்ச்சி நடக்கும் பல்லாவரம் மைதானத்தில் திமுக பாஜகவினர் போட்டி போட்டு கோஷமிட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பல்லாவரம் மைதானத்திற்கு ஹெச் ராஜா வரும் போது பெரியார் வாழ்க என்று முழக்கம் என்று கோஷமிட்டு வருகின்றனர். பதிலுக்கு பாஜகவினர் மோடி வாழ்க என்று கோஷமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அங்கே பல்லாவரம் மைதானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். குறிப்பாக அங்குப் பலர் திரண்டுள்ள நிலையில், போதியளவில் குடிநீர் கூட வைக்கவில்லை என்று திமுகவினர் குற்றஞ்சாட்டினர். இதனால் அங்கே சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது.












Click it and Unblock the Notifications