15 லட்சம் கொடுப்பதாக மோடி சொல்லவே இல்லை.. வீடியோ ஆதாரம் வெளியிட்டு ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
சென்னை: பாஜக கொடுப்பதாக சொன்ன ரூ.15 லட்சம் எங்கே என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவ்வளவு பணத்தை வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் பிரதமர் மோடி சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று சொல்லவில்லை என பதில் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசுகையில், "பாஜக அறிவித்த ஏதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றியுள்ளதா? வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக 2014 தேர்தலின்போது சொன்ன பாஜக, 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை." எனப் பேசினார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது.
— K.Annamalai (@annamalai_k) July 9, 2023
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு @mkstalin, 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு… pic.twitter.com/P4Z9nnFbsY
அண்ணாமலை பதிலடி: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பதில் அளித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தான் பிரதமர் மோடி சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி முன்பு இதுதொடர்பாக பேசிய வீடியோவை வெளியிட்டு, "தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.

மோடி அப்படி சொல்லவே இல்லை: அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சொல்லவில்லை.
திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு?
கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications