பத்ம சேஷாத்ரி மட்டுமல்லாது 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளிலிருந்து புகார்.. அதிர்ச்சியில் "ஜெயலட்சுமி"
சென்னை: காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு ஏராளமான மாணவிகள் தாங்கள் அனுபவித்த பாலியல் புகார்களை அனுப்புவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்களை அளிக்கலாம் என காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார்.

மாணவிகள்
மேலும் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தால் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது வாட்ஸ் ஆப் எண்ணை அவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். 9444772222 என்ற எண்ணிற்கு புகார்களை அளிக்க கேட்டுக் கொண்டார்.

முன்னாள் மாணவிகள்
இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் என தொலைபேசி வாயிலாக வாட்ஸ் ஆப்பிலும் தொடர்பு கொண்டு பள்ளியில் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

புகார்கள்
இதையடுத்து மாணவிகள் அளித்த புகார்களின் உண்மைத்தன்மை குறித்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் எண்ணில் தனக்கு வந்த புகார்களை எண்ணி துணை ஆணையரே அதிர்ந்து போயுள்ளார்.

பள்ளிகள்
பத்ம சேஷாத்ரி பள்ளி மட்டும் அல்ல, மற்ற பள்ளிகள், கல்லூரிகளிலும் உள்ள "ராஜகோபாலன்களை" பற்றி 30-க்கும் மேற்பட்ட புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றை ஆராய்ந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தி அந்த புகார்கள் உண்மையாக இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications