லாக்கரை உடைக்காமல் நகை எப்படி மாயமாகும்?.. ஆஜராகாத விஜய் யேசுதாஸ்.. பொய் புகாரா என போலீஸார் சந்தேகம்
சென்னை: பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை அபிராமபுரம் 3ஆவது தெருவில் வசித்து வருகிறார் பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம், வைர நகைகளை காணவில்லை என கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
வீட்டில் வேலை செய்த பணியாளர்கள் மீதுதான் சந்தேகம் எழுந்ததாக அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் பணி செய்த 11 ஊழியர்களை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் யாரும் திருடவில்லை என தெரிவித்துள்ளார்கள். பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் அவரை போலீஸார் பல முறை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் மட்டும் விசாரணைக்கு தற்போது வரை ஆஜராகவில்லை. மேலும் புகார் அளித்த விஜய் யேசுதாஸ் மனைவி தக்ஷனாவும் காவல் துறையில் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
அது போல் திருடு போனதாக சொல்லப்படும் 60 சவரன் நகைகளும் பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்பட்டதாக விஜய் யேசுதாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் லாக்கர் உடைக்கப்படவில்லை என ஆய்வின் போது தெரியவந்துள்ளது. லாக்கரின் பாஸ்வேர்டை போட்டு பணியாளர்கள் நகைகளை திருடியிருக்கலாம் என்ற வாதத்திற்கு வந்தாலும் அந்த லாக்கரின் பாஸ்வேர்டு விஜய்க்கும் மனைவி தக்ஷனாவுக்கும் மட்டுமே தெரியும்.

வேறு யாருக்கும் தெரியாது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவகாரம் போல் அவருடைய லாக்கரின் சாவியை பணியாளர்களிடம் கொடுத்து வைத்ததில்லை, கடவுச் சொல்லையும் கூறியதில்லை. அது போல் நகைகள் காணாமல் போனதாக சொல்லப்படும் பிப்ரவரி 18 ஆம் தேதி. ஆனால் 40 நாட்களுக்கு பிறகுதான் தக்ஷனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காணாமல் போனதாக பிப்ரவரி 18ஆம் தேதியே தெரிந்தநிலையில் ஏன் தாமதமாக புகார் அளித்தார் என காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து போலீஸார் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் முறையான பதிலை தரவில்லை என போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஒரு வேளை விஜய் யேசுதாஸ் தரப்பு நகை திருடு போனதாக பொய் புகார் அளிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications