அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டம்.. டைம் நெருங்குதே, அப்ளை பண்ணியாச்சா? கடைசிநாள் எப்போ தெரியுமா
சென்னை: அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிமாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் கூடுதல் விவரங்களை அறிய மெயில் ஐடி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம் என்பது இந்திய அஞ்சல் துறையின் சார்பில், கடந்த 2017-ல் நவம்பர் 3ம்தேதி அன்று தொடங்கப்பட்ட திட்டமாகும்.. தபால்தலை சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஒரு முக்கிய பொழுதுபோக்காக ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை அஞ்சல்துறை துவங்கியது.
அதாவது தபால் துறை சார்பில் "ஸ்டாம்ப்" சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. தற்போதுவரை அது வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள்: உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வருடா வருடமும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் இதில் பிரத்யேகமாக இடம்பெற்றுள்ளது.. அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
தகுதிகள்: 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.. வருடத்துக்கு ரூ.6000/- உதவித்தொகையும் வழங்கப்படும்.. விண்ணப்பதாரர் இந்தியாவிற்குள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்புக்குள் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு சங்கம் இருக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
அந்தவகையில், இந்த வருடமும், இந்த திட்டத்தின்கீழ் பயன் பெற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
"அஞ்சல்தலை வினாடி-வினா மற்றும் அஞ்சல்தலை திட்டம் என்ற இரண்டு நிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மண்டல அளவிலான அஞ்சல்தலை வினாடி-வினா போட்டி அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடைபெறும். இதில் தேர்வு பெறும் மாணவர்கள் 2ம் நிலையான அஞ்சல்தலை திட்டத்தில் தங்கள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தையோ அல்லது 044-28543199 என்றஎண்ணிலோ அல்லது [email protected] என்ற இ-மெயில் மூலமாகவோதொடர்பு கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம்: ஸ்காலர்ஷிப்பாக 6 ஆயிரம் ரூபாய் கிடைக்க போவதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளை சேர்ந்த, மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளைச் சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications