பத்திரப்பதிவு.. சொத்து ஆவணம் ரெடி? நாளை மாசி மாதம் சுபமுகூர்த்த தினம்.. பதிவுத்துறை கூடுதல் டோக்கன்
சென்னை: மாசி மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 300 டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.. இப்படி ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் போகும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

கோரிக்கை ஏற்பு
எனவே, அன்றைய தினங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.. அதனபடியே, சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
நாளை பத்திரப்பதிவு
அந்தவகையில், மீண்டும் அறிவிப்பு ஒன்றை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.. மாசி மாதத்தின் மங்களகரமான தினமான வருகிற (10.03.2025) திங்கட்கிழமை (நாளை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
மாசி மாத சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளினால், அதிக நேரம் காத்து நிற்காமல் உடனடியாக பத்திரப்பதிவு செய்துவிடமுடிகிறது. அத்துடன், இடைத்தரகர்களுக்கும் இதில் இடமில்லை.












Click it and Unblock the Notifications