அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு.... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: கடந்த 8:ஆம் - தேதி கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ராயல்சீமா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தற்போது தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும். ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். தற்போதைய பதிவுப்படி 2.4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது மழையின் அளவு 37 சதவீதம் குறைந்துள்ளது.
நேற்றைய மழை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், கடும் வெயிலிலிருந்து தப்பிக்கவும், குடிநீர் பஞ்சத்தில் இருந்து மீளவும், மழையை எதிர்பார்த்திருந்த சென்னை மக்களை நேற்று மழை வந்து மகிழ்வித்தது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.
சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போகினர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்றைய மழையால், மகிழ்ச்சி அடைந்த மக்கள் சமூக வலைதளங்களில் #chennairains என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். சென்னையில் இன்று மேகமூட்டமாக உள்ளதால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications