"கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை.." பாஜகவில் இருந்து விலகிய கவுதமி.. ராம சீனிவாசன் பரபர
சென்னை: நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இன்று காலை நடிகர் கவுதமி தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. பாஜக மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்த அவர், 25 ஆண்டுகளாகத் தான் பாஜகவில் இருப்பதாகவும் இன்று கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

நடிகை கவுதமி: இது தொடர்பாக அவர் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தனிமையைக் கண்டு என்னை அணுகினார், ஏனெனில் நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் கணவர் இன்றி ஒரு தாயாகவும் இருந்தேன். அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல வந்தார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்து அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு இல்லை: இந்த விவகாரத்தில் தொடர் புகார்களை அளித்துள்ளதாகவும் இருப்பினும் ஆனால் அந்த செயல்முறை விவரிக்க முடியாத அளவுக்கு இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தனியார் டிவி சேனலில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "அவரது எந்த அரசியல் பணிக்காகக் கட்சி துணை நிற்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை. நிலத்தை அபகரிப்பது என்பது சட்ட விரோதமான செயல். அதற்கு நிலத்தை அபகரிப்பு வழக்கு தொடரலாம்.
இது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாரா.. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி அவர் புகார் அளித்திருந்தால் இது சட்ட ரீதியான பிரச்சினை தான். இதில் கட்சி எங்கே வந்தது. நில பிரச்சினை, கடன் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவே இங்கே கட்சி என்ற அமைப்பு இருக்கிறது. மேலும், இந்த நில விவகாரத்தில் யார் செய்தது தவறு.. இவர் மீது நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கட்சிக்கு எப்படித் தெரியும்.
கட்டப் பஞ்சாயத்து: நில விவகாரம் என்றால் இரு தரப்பிலும் பிரச்சினை இருக்கலாம். அதில் கட்சி தலையிட முடியாது. நில அபகரிப்பு என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை அவர் எடுக்கலாமே.. ஏன் அவர் அதை எடுக்கவில்லை. கட்டப் பஞ்சாயத்து செய்வது கட்சியின் வேலை இல்லை. இதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்.

ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என வைத்துக் கொள்ளுங்கள்.. அவரது நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என வைத்துக் கொள்வோம். அவருக்குத் தமிழ்நாட்டில் நிதி கிடைக்க வாய்ப்பே இல்லையா.. போலீசார், சட்டம், நீதிமன்றம் எல்லாம் பாதிக்கப்பட்டவருக்காக நிற்கும். அதில் என்ன பிரச்சினை. சட்ட ரீதியாகச் செல்வதை விட்டுவிட்டு ஏன் கட்சியை இதில் இழுக்கிறார் எனப் புரியவில்லை.
விலகிக் கொள்ளுங்கள்: பாஜக என இல்லை.. எந்தவொரு அரசியல் கட்சியிலும் யார் வேண்டுமானாலும் கட்சியில் உறுப்பினராகச் சேரலாம்.. யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம். அப்படி கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் தாராளமாக விலகிக் கொள்ளலாம். அதிலும் 20, 25 ஆண்டுகள் கட்சியில் இருக்கிறேன் என்கிறீர்கள். உங்கள் பங்களிப்பிற்கு நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன் வாழ்த்துகள். அவர் சொன்ன நில பிரச்சினை புகார்களை எல்லாம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தால் நல்லது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications