பார்சல் வந்த 64 டன் தங்கம்.. அடித்து ஆடும் RBI! வெளிநாடுகளிலிருந்து திருப்பி எடுக்கப்பட்ட பொக்கிஷம்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 64 டன் தங்கத்தை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த தங்கம் 575.8 டன்னாக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் 2025 இறுதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.8 டன்னாக இருந்தது. இதில் 290.3 டன் தங்கம் இங்கிலாந்து வங்கி மற்றும் பன்னாட்டு தீர்வுகளுக்கான வங்கியின் (BIS) வசம் உள்ளது. மேலும் 14 டன் தங்கம் தங்க வைப்புத் திட்டங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தங்க இருப்பு
கடந்த 18 மாதங்களில் உள்நாட்டில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் இவ்வளவு தங்கம் திருப்பி எடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். அதிக அளவு தங்கத்தை இந்தியா இவ்வளவு வேகமாக கொண்டு வந்ததும் இதுவே முதல்முறையாகும்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி தனது வெளிநாட்டுத் தங்கத்தை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரத் தொடங்கியது. உலகளாவிய நிகழ்வுகள். சர்வதேச அரசியல், சர்வதேச பொருளாதார சரிவு ஆகியவை வெளிநாட்டில் உள்ள இந்திய தங்கத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய இருப்புகளும், தாலிபான்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் இருப்புகளும் மேற்கத்திய அரசாங்கங்களால் முடக்கப்பட்டது. இது போன்ற பல அபாயங்கள் உள்ளன. வெளிநாடுகளில் தங்கத்தை சேமிப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.
இந்தியா ஆர்பிஐ
தங்கத்தின் விலையில் ஏற்படும் நிலையற்றத்தன்மை காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைப்பால் இப்போது தங்கம் விலை உயருகிறது . எதிர்காலத்தில் குறையும் . அப்போது வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு என்பதால் இந்தியா இப்போது தங்கம் வாங்காமல் பின்வாங்கி உள்ளது. உலகளாவிய மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் $84 பில்லியன் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன.
அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு முக்கியமான முதலீடாக மாறியுள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், இதில் முதலீடு செய்வது சவாலாக மாறியுள்ளது.
தங்கம் விலை
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15% ஆகும், இதன் மதிப்பு சுமார் $23 டிரில்லியன். தற்போதைய உலக அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் $12.5 டிரில்லியன் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 65% நகைகள் வடிவில் உள்ளன. உலகப் பொருளாதாரம் மோசமடைந்து வருவதால், அடுத்தது என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் பல நாடுகளும் தங்கத்தை வாங்கக் குவிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, 2020 நிதியாண்டில் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது. உலக தங்க தரவரிசையில் இந்தியா உயர்ந்துள்ளது. தங்க இருப்பில் உலகின் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது, 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆக உள்ளது, இது 2021 இல் 6.86% ஆக இருந்தது. இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி சீனாவிற்கு சவாலாக மாறக்கூடும்.
ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைத் தரவுகளின்படி, தற்போது இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்புகளில் சுமார் 9% தங்கமாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 4% ஆக இருந்தது. செப்டம்பர் மாத இறுதியில் சுமார் 579 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி சொத்துக்கள், முதன்மையாக பத்திரங்கள், பிற மத்திய வங்கிகள் மற்றும் BIS உடனான வைப்புகள், அத்துடன் வெளிநாட்டு வர்த்தக வங்கிகளுடனான வைப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, மொத்த வெளிநாட்டு சொத்துக்களில் 489.54 பில்லியன் அமெரிக்க டாலர் பத்திரங்களிலும், 46.11 பில்லியன் அமெரிக்க டாலர் பிற மத்திய வங்கிகள் மற்றும் BIS உடனும், 43.53 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு வர்த்தக வங்கிகளுடனும் வைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications