வீடு விற்க போறீங்களா.. ரூ.10 லட்சம் மேல் இருந்தால் அவ்வளவுதான்.. ரியல் எஸ்டேட் புது அதிரடி.. பண்ணுங்க
சென்னை: வீடு, மனை விற்பனையின் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, ரியல் எஸ்டேட் முகவர்களுக்கான, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன..
வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. இதை அமல்படுத்த, 2017ல் இருந்து, மாநில அளவில் ரியல் எஸ்டேட் ஆணையம் மற்றும் தீர்ப்பாயங்கள் செயல்பட்டும் வருகின்றன..

வீடு மனை: அதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது.
2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
இந்நிலையில், வீடு, மனை விற்பனையின் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, ரியல் எஸ்டேட் முகவர்களுக்கான, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.. மத்திய அரசின், மறைமுக வரி மற்றும் சுங்க தணிக்கை இயக்குனரகம் சார்பில் இந்த கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
கட்டுப்பாடுகள் என்னென்ன:
- வீடு, மனை பரிமாற்றத்தில் சட்ட விரோத வழிகளில் பணப் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்பதை, கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்
- வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணம் முறையாக கணக்கில் காட்டப்பட வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர் வாயிலாக பெறப்பட்ட பணம் என்றால், சட்ட விதிகளுக்கு உட்பட்ட நடைமுறைகள் கள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்று பார்க்க வேண்டும்
- உங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சொத்து பரிமாற்றத்திலும் கையாளப்படும் பணம் தொடர்பாக, தனித்தனி கணக்குகள் பராமரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு சொத்து பரிமாற்றத்திலும், 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை, ரூபாயாகவோ, வெளிநாட்டு கரன்சியாகவோ கைமாறினால், அதுகுறித்த விபரங்களை அரசுக்கு, 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்
- ரொக்க பணம் பரிமாற்றத்தின் போது, நோட்டுகளின் வரிசை எண் விபரங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும்.. கள்ள நோட்டுகள் புழங்காமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும்...
- ரொக்கமில்லாத பரிவர்த்தனை விபரங்களையும் பதிவேடுகளில் துல்லியமாக குறிப்பிட வேண்டும். ...
இந்த கட்டுப்பாடுகள் அடங்கிய அறிக்கையை, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது... அத்துடன், பதிவு செய்த ரியல் எஸ்டேட் முகவர்கள், இந்த விதிகளை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
