வசமாக சிக்கிய 'ராஜா பகவத்' விக்கி.. 18 வயது தாண்டலையாம்! சுத்தி சுத்தி ரெய்டு! அலறிய வண்ணாரப்பேட்டை
சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான 'ராஜா பகவத்' விக்னேஷ், வண்ணாரப்பேட்டையில் கேஜிஎஃப் எனும் துணிக்கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த துணிக்கடையில் பணிபுரிந்து வந்த சிறார்களை குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகள் மீட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கி எனும் விக்னேஷ் என்பவர் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் அதைவிட அவரது கடை குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் மூலமாகதான் அவரது பெயர் நெட்டிசன்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தது. இவரை விக்கி, விக்னேஷ் என்று அடையாளப்படுத்துவதை விட 'ராஜா பகவத் விக்னேஷ்' என சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்சி ரோட்டில் என்என் கார்டன் பகுதியில் 3வது தெருவில் கேஜிஎஃப் எனும் துணிக்கடையை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக மொத்தம் மூன்று கடைகள் இருக்கின்றன. தற்போது தீபாவளி சீசன் என்பதால் இந்த துணிக்கடையில் வியாபாரம் தாறுமாறாக சென்றுக்கொண்டிருக்கிறது. வியாபாரம் சூடுபிடித்ததால் கடைக்கு ஆள் வேண்டும் என்றும் யூடியூப் வாயிலாக கேட்டிருந்தார்.
இப்படி இருக்கையில்தான் இன்று குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகள் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் ஜீ.ஏ ரோடு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இங்கு ஏறத்தாழ ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில்தான் அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர்.

இந்த திடீர் ரெய்டில் 'ராஜா பகவத்' விக்னேஷ் நடத்தி வந்த துணிக்கடையிலிருந்து 10 சிறார்களை அதிகாரிகள் மீட்டிருக்கின்றனர். மீட்கப்பட்ட அனைவரும் இராயபுரம் சூரிய நாராயணா சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு முதற்கட்ட விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 3 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களை அனுப்பி வைத்த அதிகாரிகள், 3 சிறார்களை மட்டும் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்திருக்கின்றனர்.
அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ராஜா பகவத்' விக்னேஷ் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே வியாபார போட்டி காரணமாக ரவுடிகளை ஏவி, சக கடை உரிமையாளரை தாக்கியதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை இவரை கைதும் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications