அப்பாவின் சடலம் முன்பே.. மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த ரவுடி நாகேந்திரன் 2ஆவது மகன் அஜித்!
சென்னை: ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2ஆவது மகன் அஜித், ஏற்கெனவே நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்த போது உணவு டெலிவரி செய்வது போல் வந்த 8 பேர் கொண்ட மர்ப நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட 8 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு சுரேஷ் மரணத்திற்கு பழிக்கு பழியாக நடத்தப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்க்கொண்டதில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன், வழக்கறிஞரான என். அஸ்வத்தாமன் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிறையில் இருந்தபடியே, நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிச் செயல்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் நாகேந்திரனின் மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று மனுத் தாக்கல் செய்ததை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன், கடந்த வியாழக்கிழமை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது மனைவி, உடற்கூராய்வை தங்களது மருத்துவர் தலைமையில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் தலைமையில் உடற்கூராய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உடற்கூராய்வினை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது மகன் அஸ்வத்தாமனிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நாகேந்திரனின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்கில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மேற்பார்வையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2ஆவது மகன் அஜித், ஏற்கெனவே நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், நாகேந்திரன் உடல்நலக் குறைவால் மரணமடைந்ததால் இன்று அவரது சடலத்துக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நாகேந்திரன் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் நாகேந்திரனின் 2-வது மகன் அஜித் ராஜுக்கும் தொடர்பு இருந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications