குடிமைப்பணி தேர்வுக்கு தயாராக பயிற்சி..1000 மாணவர்களுக்கு 25000 ஊக்கத்தொகை..பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.

மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது.மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை குறித்து குறிப்பிட்டார். புதிய திட்டங்களையும் அறிவித்தார். தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலை தேர்வுக்கு தயாராக அவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7000 ரூபாய் வீதம் 10 மாதங்கள் நிதி உதவி அளிக்கப்படும். முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 25000 ரூபாய் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் குறைந்து வருவதை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications