கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு! சூர்யா கையை பிடித்து சைதை துரைசாமி கண்ணீர்.. தேற்றிய சிவகுமார்
சென்னை: கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளருடன் புதிய படம் எடுப்பதற்காக லொகேஷன் பார்க்க சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டு காஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி மாலை வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது ஓட்டுநர் டென்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கார் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று நீரில் மூழ்கியிருந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சினின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து வெற்றியின் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் படுகாயங்களுடன் பாறைகளில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சிம்லா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. சைதை துரைசாமியின் மகனை சட்லஜ் ஆற்றுக்குள் தேடி வந்தனர்.
அவரது உடல் கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெற்றியின் உடைகள், உடமைகள், சூட்கேஸ், ஐஃபோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றியின் நிலை தெரியவில்லை. பாறை இடுக்குகளில் இருந்த மனித மூளை வெற்றியினுடையதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.
ஏனெனில் டென்சினுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து மனித மூளை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒப்பிட சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரிகளும் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் வெற்றியை போன்று எடை, உயரம் கொண்ட ஒரு பொம்மையை செய்து அதை நீரோட்டத்தில் போலீஸார் விட்டனர்.
பிறகு அது எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தனர். அவ்வாறு செய்த போது அது ஒரு இடத்தில் மூழ்க சென்றது. உடனே அந்த இடத்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் 13 ஆம் தேதி இறங்கி தேடினர். அப்போது ஒரு கை தெரிந்தது. அங்கு சென்று ஒரு வீரர் பார்த்த போது பாறையின் இடுக்கில் வெற்றியின் உடல் சிக்கியிருந்தது.
உடனே அந்த வீரர், வெற்றியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸார் அந்த சடலத்தை பார்த்து வெற்றியினுடைய சடலம் என உறுதிப்படுத்தினர். பிறகு அந்த சடலம் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு வெற்றியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெற்றியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அது போல் வெற்றியின் நண்பர் அஜித்தும் அவருடைய உடல் வரும் வரை அரை மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் சென்றார்.
இதையடுத்து சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் எனது மகன் இமாச்சல் போவதாக கூறிய போது நான் வேண்டாம் என்றேன். ஆனால் இதுதான் கடைசி என கூறிவிட்டு சென்றான். இப்படி இதுவே அவனது கடைசி பயணமாக மாறும் என நான் ஒரு காலும் நினைக்கவில்லை. ஒரு மகன் போனாலும் என் அகாதெமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்த நிறைய மகன், மகள்கள் இருக்கிறார்கள் என சைதை துரைசாமி உருக்கமாக தெரிவித்திருந்தார்.
நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் சைதை துரைசாமியை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் சைதை துரைசாமி கூறுகையில், என் மகன் இறப்பு என்ற கெட்ட விஷயத்திலும் நல்லது நடந்தது. அது என்னவென்றால் அவனுடைய உடல் கிடைத்ததுதான். இல்லாவிட்டால் அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என மனதை நெருடிக் கொண்டே இருந்திருக்கும்.
என் மகன் இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம், அப்பா நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள். ஒரு மகனை நான் இழந்தாலும் எனக்கு இத்தனை மகன்கள் கிடைத்துள்ளனர். ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் இப்படி ஒரு கெட்ட விஷயம் நடந்திருக்கிறது. இவ்வாறு கண்ணீருடன் கூறிய சைதை துரைசாமியை சிவக்குமாரும் சூர்யாவும் ஆறுதல்படுத்தினர்.












Click it and Unblock the Notifications